தஞ்சாவூர்: தஞ்சாவூர் காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் மாடுகள் அதிக அளவில் உலா வருவதால் மக்கள் வெகு அச்சத்தில் உள்ளனர். காய்கறிகள் வாங்கிக் கொண்டு செல்லும் மக்களை மாடுகள் விரட்டுவதால் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே காய்கறி மார்க்கெட்டின் உள்ளே மாடுகள் வருவதை தடுப்பது குறித்து மாநகராட்சி உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தஞ்சை அரண்மனை அருகே காமராஜர் மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற இடங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
இங்கிருந்து தஞ்சை நகரில் பல்வேறு பகுதிகள் மற்றும் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, மன்னார்குடி போன்ற பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து காய்கறிகளை வாங்கி செல்வார்கள். இந்த மார்க்கெட்டில் பெரிய கடைகள் 93ம், சில்லரை விற்பனை கடைகள் 212ம், தரைக்கடைகளும் உள்ளன. அங்கு பொதுமக்கள் மொத்தமாகவும் மற்றும் சில்லறையாகவும் காய்கறிகள் வாங்கிச் செல்வார்கள்.
இந்நிலையில் அங்கு விற்கப்படாத மீதம் உள்ள காய்கறிகள் அனைத்தும் அருகே உள்ள குப்பை தொட்டியில் கொட்டப்பட்டு வருகிறது. அதேபோல் குப்பை தொட்டியை தவிர மற்ற இடங்களிலும் குப்பைகள் கொட்டுவதால் அதனை சாப்பிடுவதற்காக மாடுகள் மற்றும் குதிரைகள் அதிக அளவில் வலம் வருகின்றன. மேலும் அங்கு அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டு அப்புறப்படுத்தாமல் உள்ளது.
இதனால் அங்கு மாடுகள் அதிகளவில் வருகின்றன. மாடுகளால் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. அந்த குப்பைகள் சாலையில் கிடப்பதால் மழையின் காரணமாக நனைந்து நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த நிலையில் அங்கு உள்ள குப்பைகளை அப்புறப்படுத்துவதோடு அங்கு கால்நடைகள் வராமல் முற்றிலுமாக தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுமட்டுமின்றி தஞ்சை நகரின் சாலைகள் பலவற்றிலும் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது. கடந்த 6ம் தேதி தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை அன்னை சாவித்திரி நகரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (59) என்பவர் வீட்டில் இருந்து வெளியே செல்ல பைக்கில் புறப்பட்டார். இவர் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர். இவர் தஞ்சை மெடிக்கல் காலேஜ் ரோடு மூலிகைப் பண்ணை எதிரில் வந்த போது சாலையில் பசு மாடு ஒன்று குறுக்கே புகுந்தது.
பசு மாடு மீது மோதாமல் இருக்க தமிழ்ச்செல்வன் பைக்கை திருப்பி உள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த பைக் அருகில் இருந்த காம்பவுண்ட் சுவர் மீது மோதியது. இது தூக்கி வீசப்பட்ட தமிழ்ச்செல்வன் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே தமிழ்ச்செல்வன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபோன்ற பல்வேறு விபத்துக்கள் தஞ்சை மாநகரில் நடந்து வருகிறது. மாடுகளின் உரிமையாளர்கள் இதுகுறித்து கவலைப்படுவதில்லை. இப்படி நகர் முழுவதும் சுற்றித்திரியும் மாடுகள் தங்களுக்குள் மோதிக் கொண்டு வாகனங்களில் மோதி விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் நடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மாடுகளை பிடித்து பட்டியில் அடைத்து அதிக அபராதம் விதிக்க வேண்டும். மேலும் பள்ளிகளுக்கு அருகிலும் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் பள்ளி குழந்தைகள் அச்சப்படுகின்றனர். எனவே காலம் தாழ்த்தாமல் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.