தஞ்சாவூர்: தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் வயலூர் பகுதியில் இன்று 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் பஸ் டிரைவர்கள் 2 பேர் உட்பட கல்லூரி மாணவ, மாணவிகள், பயணிகள் என மொத்தம் 37க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். 


வயலூரில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்


தஞ்சாவூர் மாவட்டம் மனோஜ்பட்டி பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவரின் மகன் அருள் (35). தனியார் பஸ் டிரைவர். இவர் இன்று தஞ்சையில் இருந்த கும்பகோணத்திற்கு வழக்கம் போல் பஸ்சை ஓட்டிச் சென்றார். இதேபோல் எதிர் திசையில் திருவையாறு ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் செல்வகுமார் (27) கும்பகோணத்தில் இருந்து தஞ்சை நோக்கி ஒரு தனியார் பஸ்சை ஓட்டி வந்தார். 


இந்த 2 பஸ்களிலும் சுமார் 100க்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்தனர். குறிப்பாக மாணவ, மாணவிகள் அதிகம் பேர் இருந்தனர். தஞ்சாவூர் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் வயலூர் அருகே இந்த  2 தனியார் ஸ்களும் நேருக்கு நேர் மோதி கொணடன. இதில் தஞ்சையில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழாமல் நூலிழையில் தப்பியது என்பதும் குறிப்பிடத்தக்கது.




37க்கும் அதிகமானோர் காயம்


இந்த விபத்தில் இரு பஸ்களின் முன்பகுதி முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது. உடன் அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்து காயமடைந்த கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பணிகள் என 37-க்கும் மேற்பட்டோரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பஸ் டிரைவர்களும் தனியாக ஆம்புலன்சில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.  இந்த விபத்தால் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


விபத்து நடந்தது எப்படி? பயணிகள் கூறிய தகவல்


இதுகுறித்து விபத்து நடந்த பஸ்சில் வந்த பயணிகள் சிலர் கூறுகையில், கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த தனியார் பஸ் டிரைவர் செல்வகுமார் மதுபோதையில் இருந்திருப்பார் என்று தெரிகிறது. பஸ்சை வெகு வேகமான ஓட்டி வந்தார். மேலும் செல்போன் பேசிக்கொண்டும் ஓட்டி வந்தார். அப்போது எதிரே வந்த தனியார் பஸ்மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது என்றனர். 


டிரைவிங் லைசென்சை ரத்து செய்ய வேண்டும்


இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், தஞ்சை- கும்பகோணம் சாலையில் எப்போது போக்குவரத்து மிகுந்து காணப்படும். மேலும் தற்போது விபத்து நடந்த பகுதியானது வளைவு பகுதியாகும். அனைத்து தனியார் பஸ்களும் இப்பகுதியில் அதிக வேகத்தில் இயக்கி வருகின்றனர். இரவு நேரங்களில் போட்டி போட்டுக் கொண்டு பஸ்சை இயக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுபோன்று பஸ்சை அதிவேகமாக இயக்கம் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களின் லைசென்சை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.