தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரை அடுத்த வேப்பத்துார்-கல்யாணபுரம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அனைவரும் விவசாயிகளாகவும் மகளிர் சுய உதவிக்குழுவினர்கள் இருப்பதால், அவர்கள் பணம் பரிவர்த்தனையை, பேங்க் ஆப் பரோடா வங்கியின் மூலம் செய்து வருகின்றனர். இவர்கள் திருவிடைமருதுாரிலுள்ள வங்கிக்கு சென்று பணம் பரிவர்த்தனை செய்ய முடியாததால், ஏடிஎம் இயந்திரம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததின் பேரில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, வேப்பத்துார்-கல்யாணபுரம் சாலையில் ஏடிஎம் இயந்திரம் அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பொது மக்கள், ஏடிஎம் இயந்திரம் மூலம் பணம் பரிவர்த்தனை செய்து வந்தனர்.




இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொது மக்களுக்கு பல்வேறு பொருட்கள் வாங்க பணம் தேவைப்படும் என்பதால், அதிகமான பணத்தை ஏடிஎம் இயந்திரத்தில், வங்கி அலுவலர்கள் வைத்திருந்தனர். இந்நிலையில், அதிகாலை 2.48 மணிக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தலையில் பிளாஸ்டிக் கேரி பேக் உடன், முகத்தில் மாஸ்க் அணிந்து உள்ளே வந்து, ராட்ஷத கடப்பாறையால், ஏடிஎம் இயந்திரத்தை பெயர்க்க முயற்சி செய்தார். சுமார் அரை மணி நேரம் கடும் முயற்சி செய்த பின், ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள பணத்தை திருட முடியாததால், கடப்பாறையை மட்டும் அங்கேயே விட்டு சென்று விட்டார்.


இது குறித்து தகவலறிந்த திருவிடைமருதூர் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, பார்வையிட்டனர். பின்னர், வங்கி அதிகாரிகளுக்கும், கைரேகை பிரிவு எஸ்ஐ லெட்சுமி, ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த அடையாளம் தெரியாத நபரின் கைரேகை பதிவாகியுள்ளதா என ஆய்வு செய்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர், வங்கி அதிகாரிகள் சோதனையிட்டதில், சுமார், 2.5 லட்சம் பணம் ஏடிஎம் இயந்திரத்திலேயே பாதுகாப்பாக இருந்ததால், அப்பணத்தை வங்கி அதிகாரிகள், இயந்திரத்திலிருந்து மீட்டு வைத்துள்ளனர்.




இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், கல்யாணபுரம்-திருவிடைமருதுார் சாலையில் கல்யாணபுரம் கிராமத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கி ஏடிஎம் உள்ளது. இங்குள்ள ஏடிஎம் குறுகலான பகுதியில் இருப்பதால், வெளிநபர்களுக்கு எளிதாக தெரியாது. இந்த ஏடிஎம் இருப்பது உள்ளூரை சேர்ந்தவர்களுக்கு மட்டும் தெரியும். அதிகாலை 2.48 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்கவர்கள் தான் செய்திருக்க வேண்டும். மேலும் தலையில் கேரிபேக்கை போட்டு கொண்டு, முகத்தில் மாஸ்க் மட்டும் அணிந்து வந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி செய்துள்ளது இப்பகுதியில் சேர்ந்துள்ளவர்களாக இருக்கலாம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடிப்பதற்கும், பல்வேறு செலவுகளுக்கு பணம் இல்லாததால், வேறு வழியின்றி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருடியிருக்கலாம். இது குறித்து திருவிடைமருதுார் போலீசார், பழைய கொள்ளைக்காரர்களின் உருவ படங்களை வைத்து, திருடும் அடையாளம் தெரியாத நபரின் உருவத்தை ஆய்வு செய்து வருகின்றனர் என்றனர்.