காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு சுமார் 10 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் 60 சதவீதம் நேரடி விதைப்பிலும் 40 சதவிகிதம் நடவு பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 10 தினங்களுக்கு மேலாக திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சம்பா நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பயிர்களை உடனடியாக வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் கன மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை தமிழ்நாடு வேளாண் துறை இயக்குனர் அண்ணாதுரை நேரடியாகச் சென்று ஆய்வு செய்து வருகிறார். திருவாரூர் அருகே கருப்பூர், அடியக்கமங்கலம், மணலி, எடையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட வயல்களுக்கு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட சம்பா நெல் பயிர்களை பார்வையிட்டார். பின்னர் வயல்களில் விவசாயிகள் இறங்கி பாதிக்கப்பட்ட சம்பா நெல் பயிர்களை எடுத்து தமிழ்நாடு வேளாண் துறை இயக்குனரிடம் காண்பித்தனர். அப்பொழுது விவசாயிகள் வேளாண்துறை இயக்குனரிடம் இதுவரை பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்திருக்கிறோம். தற்பொழுது கனமழையின் காரணமாக சம்பா நெல் பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கியுள்ளன. மழை நீரை வடிய வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், மேலும் சம்பா நெல் பயிர்களைப் பாதுகாப்பதற்கு வேளாண் துறை அதிகாரிகள் உரிய ஆலோசனை வழங்க வேண்டும், மேலும் மழை நீரை வடிய வைத்த பின்னர் உடனடியாக உரம் அடிப்பதற்கு வேளாண் கிடங்குகளில் தட்டுப்பாடின்றி உரம் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வேளாண் துறை இயக்குனர் அண்ணாதுரையிடம் வலியுறுத்தினர். இந்த ஆய்வின்போது திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வின் போது உடன் இருந்தனர்.