பத்து வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்களை ஆண்டுக்கு 62,000 ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கி அந்நால்வரையும் கடந்த 2 ஆண்டுகளாக ஆடு மேய்க்கும் தொழிலில் கொத்தடிமைகளாக ஈடுபடுத்திய இராமநாதபுரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (49) என்ற ஆடு வளர்க்கும் இடையரை தஞ்சாவூர் தாலுகா காவல் நிலைய போலீஸார் குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம் மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் அருகேயுள்ள வல்லம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ்-பாப்பாத்தி தம்பதியினரின் மகன்களான ராஜா (9), ரவி (8), ராமு (7), சோமு (6) ஆகிய 4 சிறுவர்களை ராமநாதபுரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் அச்சிறுவர்களின் பெற்றோர்களிடம் ஆண்டுக்கு 62,000 கொடுத்து விலைக்கு வாங்கி ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் டிசம்பர் 5 ஆம் தேதி சூரக்கோட்டை கிராமம் பரிசுத்தம் ஜேம்ஸ் நகரில் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள் ராஜா, ரவி ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவந்து தஞ்சாவூர் புறவழிச்சாலை மன்னார்குடி பிரிவு சாலையில் வழிப்போக்கர் ஒருவரின் உதவியுடன் சைல்டு லைன் அமைப்பினருக்கு 1098 இலவச தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, சைல்டு லைன் அமைப்பை சேர்ந்த அன்புமணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு புற தொடர்பு பணியாளர் திணேஷ்குமார் மற்றும் தஞ்சாவூர் தாலுக்கா காவல் நிலைய போலீசார் ஆகியோம் சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் நின்றிருந்த சிறுவர்களை மீட்டனர். பின்னர் தஞ்சாவூர் தாலுக்கா காவல் நிலைய போலீசாரின் உதவியுடன் மீட்டனர்.
அச்சிறுவர்கள் கொடுத்த தகவலின்பேரில், மற்றொரு இடத்தில் கொத்தடிமைகளாக ஆடுமேய்க்கும் தொழிலில் ஈடுபட்டுவந்த அவர்களது சகோதரர்கள் ராமு, சோமு ஆகிய இருவரும் மீட்கப்பட்டனர்.மீட்கப்பட்ட 4 சிறுவர்களும் தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் மு.ரஞ்சித் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டனர்.இராமநாதபுரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், அச் சிறுவர்களின் பெற்றோரிடம் சிறுவர்கள் ராஜா, ரவி ஆகியோருக்கு ஆண்டுக்கு தலா ரூ.25, 000 வீதமும், ராமு, சோமு ஆகியோருக்கு ஆண்டுக்கு தலா ரூ. 6,000 வீதமும் என மொத்தம் ரூ.62 ஆயிரம் விலை கொடுத்து வாங்கி அந்நான்கு சிறுவர்களையும் ஆடு மேய்க்கும் தொழிலில் கொத்தடிமைகளாக ஈடுபடுத்தி வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
காணாமல் போனதாக கருதப்பட்ட பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் ஐம்பொன்சிலை கண்டுபிடிப்பு
இதை தொடர்ந்து, வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவின்பேரில், அச்சிறுவர்கள் நால்வரும் கொத்தடிமை தொழிலாளர் முறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, மாவட்ட குழந்தைகள் நல அலுவரின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டு, அரசினர் குழந்தைகள் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில், சூரக்கோட்டை வருவாய் நிர்வாக அலுவலர் சங்கீதா அளித்த புகரின்பேரில், தஞ்சாவூர் தாலுகா காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்ட உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சிறுவர்களை விலைக்கு வாங்கிய கோவிந்தராஜை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கோவிந்தராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
75 ஆண்டுகளாக குளத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்