திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர் சுமார் 3.75 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறுவை அறுவடை சமயத்தில் தொடர் கனமழை பெய்ததன் காரணமாக சுமார் 50 ஆயிரம் ஏக்கர் அளவிற்கு குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முழைத்துவிட்டதாக தமிழக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. குறுவையில் பாதிப்பை சந்தித்த விவசாயிகள் அடுத்த சாகுபடியான தாளடி மற்றும் சம்பா சாகுபடியை மேற்கொண்டபொழுது மீண்டும் பருவம் தப்பிய தொடர் கனமழை காரணமாக சம்பா, தாளடி பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகின. இதில் குறிப்பாக தாளடி பயிர்கள் 75 சதவீதம் அளவிற்கு மழை நீரில் மூழ்கி அழுகிவிட்டன.




இதன் தொடர்ச்சியாக மீதமுள்ள சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்களை விவசாயிகள் பாதுகாக்கும் வகையில் அரசு யூரியா போன்ற இடு பொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், உரத் தட்டுப்பாடு காரணமாக தனியார் உர வியாபாரிகளிடம் இருந்து அதிக விலை கொடுத்து உரங்களை வாங்கி தற்போது 70 முதல் 80 நாட்கள் வயதுடைய சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்களை பாதுகாத்து வளர்த்து வந்தனர். இந்தநிலையில் திருவாரூர் மாவட்டம் கானூர், அடியக்கமங்கலம், ஆண்டிபாளையம், தென் ஓடாச்சேரி, நன்னிலம், மாங்குடி, மாவூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, குடவாசல், வலங்கைமான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்களில் குருத்துப் பூச்சி தாக்குதல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த குருத்து பூச்சி தாக்குதல் என்பது நெற்பயிரின் அடித்தண்டில் தாக்குதலை ஏற்படுத்தி மகசூலை பாதியாக குறைத்து நெல் மணிக்கு பதிலாக பதராக விளைய வைக்க கூடிய ஒன்றாகும்.




இதனால் இரட்டிப்பு செலவு செய்து சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை காப்பாற்றிவிடலாம் என்று காத்திருந்த விவசாயிகளுக்கு தற்போதைய குருத்து பூச்சி தாக்குதல் பேரிடியாக விழுந்துள்ளது. இதுகுறித்து திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கூறும் போது. குருத்துப் பூச்சி தாக்குதல் அதிகரித்து உள்ளதால் மகசூல் இழப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றும், செலவு செய்த முதலீடை கூட பெற முடியாத சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர் எனவும், குளிர் காலம் தொடங்கி விட்டதால் குருத்துப் பூச்சியின் தாக்குதல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகமும், வேளாண் துறையும் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை ஆய்வு செய்து முழு மானியத்தில் தகுந்த பூச்சி மருந்துகளை வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.