தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மினி வேன்களில் கடத்தி வந்த ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


ரேஷன் அரிசி களத்தலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர சோதனை மற்றும் ரோந்து பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே இரு மினி வேன்களில்  கடத்தி  கொண்டுவரப்பட்ட  5,100 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.  மேலும் வாகன ஓட்டுநரைக் கைது செய்தனர்.


பட்டுக்கோட்டை அருகே ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவுபொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது. இதன் பேரில் பட்டுக்கோட்டை -அறந்தாங்கி சாலையிலுள்ள கொண்டிக்குளத்தில் உணவுபொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினர் தி தீவிர வாகன சோதனை நடத்தினர்.


அப்போது, இரு மினி வேன்களில் 102 மூட்டைகளில் நிரப்பப்பட்ட 5,100 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. வேன்களிலிருந்த மூவரில் இருவர் தப்பியோடிவிட்டனர். சிக்கிய இளைஞரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அவர் பட்டுக்கோட்டை மேலத் தெருவைச் சேர்ந்த மினி வேன் ஓட்டுநர் எம். அலாவுதீன் (28) என்பது தெரிய வந்தது.


மேலும், தப்பியோடிய பட்டுக்கோட்டை புதுசாலை பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த எஸ். பெரியசாமி (50), திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையைச் சேர்ந்த ஓட்டுநர் முருகேசனை தேடி வருகின்றனர்.


பட்டுக்கோட்டை பகுதியில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை வாங்கி கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்காகக் கடத்தப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதேபோல் பலர் பல மாவட்டங்களில் ரேஷன் அரிசியை குறைந்து விலைக்கு வாங்கி பக்கத்து மாவட்டங்கள் அல்லது மாநிலங்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்கின்றனர். போலீசார் தீவிர சோதனை மற்றும் கடும் நடவடிக்கை மேற்கொண்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பல பகுதிகளில் ரேஷன் அரிசி வாங்கி அரைத்து இட்லி மாவாக விற்பனை செய்கின்றனர். அதிக லாபம் கிடைப்பதால் ரேஷன் அரிசி கடத்தல் அதிக அளவில் நடந்து வருகிறது. இரவு நேரங்களில் லோடு ஆட்டோ, மினி லாரி ஆகியவற்றில் இது போன்று ரேஷன் அரிசி மூட்டைகள் நடத்தப்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது.


சிறிய வாகனங்கள் என்பதால் எளிதாக ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு எடுத்துச் சென்று விடுகின்றனர். எனவே இவற்றையும் போலீசார் நன்கு கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .