தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மேற்கொண்டுள்ளன காத்திருப்பு போராட்டம் 50வது நாளை எட்டியுள்ளது. இதில் பஜனைகள் பாடி வித்தியாசமான முறையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடியிலும், கடலுார் மாவட்டம் சித்துாரில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலை, கடந்த 2019ம் ஆண்டு அரவை பணிகள் இல்லாமல் மூடி கிடக்கிறது. இதற்கு காரணம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய சுமார் 112 கோடி ரூபாய் நிலுவை தொகையை வழங்க வேண்டும்.
சுமார் 6 ஆயிரம் விவசாயிகள் பெயரில் மோசடியாக, 200 கோடி ரூபாய் அளவிற்கு வங்கியில் இருந்து ஆலை நிர்வாகம் 12 வங்கிகளில் கடனை பெற்றுள்ளது. இதன் மூலம், விவசாயிகளை கடனாளியாக மாற்றியுள்ளனர். இதற்கிடையில், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையும் ஆலை நிர்வாகம் தராமலும், விவசாயிகள் பெயரில் போலியாக வாங்கி கடனையும் ஆலை நிர்வாகம் ஏற்றுக்கொள்ளாமல், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திற்கு சென்று, பொது ஏலத்தில் இரண்டு சர்க்கரை ஆலைகளையும் ஏலத்தில் விட்டு விட்டது.
தற்போது, திருஆரூரான் சர்க்கரை ஆலையை கால்ஸ் என்ற புதிய நிர்வாகம் ஏலத்தில் எடுத்துள்ளது. அந்த புதிய நிர்வாகம், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை, விவசாயிகள் பெயரில் பெற்ற கடன் தொடர்பாக பேசாமல், ஆலை திறக்க முயற்சித்தனர்.
இதையடுத்து நிலுவை தொகையை வழங்க வேண்டும், விவசாயிகள் பெயரில் போலியாக வங்கியில், வாங்கிய கடன் தொகையை புதிய நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் 50 நாட்களாக திருமண்டங்குடி ஆலைக்கு முன்பாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தினந்தோறும் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் 50வது நாளான இன்று வித்தியாசமான முறையில் வயிற்றிலும் நெற்றியில் பட்டை நாமங்களை போட்டுக்கொண்டு, காதுகளில் பூக்களை சுற்றியபடி, கைகளில் கருப்பு கொடி ஏந்தி கோவிந்தா கோவிந்தா எப்ப விடியும் எப்ப விடியும் கோவிந்தா கோவிந்தா, பத்தாதா பத்தாதா 50 நாளும் பத்தாதா, கோவிந்தா கோவிந்தா, வங்கிக்கு கோவிந்தா கோவிந்தா, வண்டி வாடகைக்கு கோவிந்தா கோவிந்தா, கரும்பு பணத்துக்கு கோவிந்தா கோவிந்தா, விடமாட்டோம் விடமாட்டோம் எங்க பணத்தை வாங்காமல் விடமாட்டோம். கோவிந்தா கோவிந்தா என்று பஜனை கோசமிட்டு கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சர்க்கரை ஆலை நிர்வாகத்திற்கு எதிராக நடைபெறும் இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். தொடர்ந்து கரும்பு விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுது;து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.