தஞ்சை மாவட்டம் பாபநாசம் வடக்கு வீதியில் பாபநாசம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் கூட்டுறவு மருந்தகம் அமைந்துள்ளது. இச்சங்கத்தில் கும்பகோணம் கும்பேஸ்வரன் தெற்கு வீதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (56) என்பவர் கூட்டுறவு செயலாளராக பணியாற்றி வருகிறார். மேலும் இச்சங்கத்தில் தென் சருக்கை கிராமத்தை சேர்ந்த ராஜேஸ்வரி (35) என்பவர் கூட்டுறவு மருந்தகத்தில் மருந்தாளுநராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 1.4.2017 முதல் 19.8.2019 வரை மருந்து கொள்முதலில் இருப்பு குறைவு, மருந்து வழங்கியதில் முறைகேடு, தானிய கடன் வசூலில் முறைகேடு என மொத்தம் ரூ. 34 லட்சத்து 41 ஆயிரத்து 761 முறைகேடு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கும்பகோணம் கூட்டுறவு துணை பதிவாளர் அட்சயபிரியா கொடுத்த புகாரின் பேரில் தஞ்சாவூர் வணிக குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சுதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, தலைமை காவலர்கள் ரத்தினகுமார், நந்தகுமார், சுரேஷ் ஆகியோர் முறைகேடு தொடர்பாக வழக்கு பதிவு செய்து கூட்டுறவு சங்க செயலாளர் ராஜேந்திரன், மருந்தாளுநர் ராஜேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்து பாபநாசம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்ற நடுவர் உத்தரவின்படி இருவரையும், 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து, கூட்டுறவு சங்க செயலாளர் ராஜேந்திரன் கும்பகோணம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். மருந்தாளுநர் ராஜேஸ்வரி திருச்சி மத்திய பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.இது குறித்து சமூக ஆர்வலர் ஜீவக்குமார் கூறுகையில், ஏழைகளுக்கு குறைந்த விலையில் கூட்டுறவு சங்கம் மூலம் மருந்துகள் வழங்க வேண்டும் என்ற நோகத்தில் செயல்பட்டு வருகிறது. ஆனால் இது போன்றவர்களால் தரமான மருந்துகள் கிடைக்குமா என்றும், குறைந்த விலையில் ஏழைகளுக்கு கிடைக்குமா என்பது கேள்வி குறியாகியுள்ளது.
தமிழக அரசு அனைத்து கூட்டுறவு சங்க மருந்தகங்களில் தணி்ககை செய்ய வேண்டும். இதே போல் தமிழகத்திலுள்ள பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. ஆனால் அதிகாரிகள் கண்துடைப்பிற்காக நடவடிக்கை எடுப்பது போல் எடுத்து, கண்டு கொள்ளாமல் இருந்து விடுகின்றனர். ஏழைகளுக்கு தரமான குறைந்த விலையில் வழங்கும் மருந்துகளை, முறைகேடாக, கொள்முதலில் இருப்பு குறைவு, மருந்து வழங்கியதில் முறைகேடு, தானிய கடன் வசூலில் முறைகேடு என மொத்தம் 34 லட்சத்து 41 ஆயிரத்து 761 முறைகேடு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, இனி வரும் காலங்களில் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால், வேறு யாரும் தவறுகள் செய்ய கூடாத அளவில் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றனர்.