பாதுகாப்பான வாழ்க்கைக்கு அறிவியலால் மட்டுமே தீர்வு காண முடியும் என தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா கந்தபுனேனி தெரிவித்தார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொழில் மற்றும் நில அறிவியல் துறை, குழந்தைகள் நலக் குழுவில் பெண்கள் மன்றம் ஆகியவை சார்பில் நடைபெற்ற தேசிய அறிவியல் நாள் விழாவில் கலந்து கொண்டு  பேசுகையில், மாணவர்கள் படிக்கும் மற்ற பாடங்களை போல அறிவியல் பாடம் இல்லை. இப்பாடத்தில் இன்னும் நிறைய படித்து கற்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கும் அதனால் பல அறிவியல் தொழில் நுட்பங்களை கண்டுபிடிக்க முடியும்.


இங்கு மாணவர்கள் காட்சிப்படுத்தியிருந்த படைப்புகளில் பிரேக்கிலிருந்து மின்சாரம் தயாரித்தல், கொரோனா காலத்தின் போது தூய்மைப் பணியாளர்கள் மருத்துவ கழிவுகளைச் சுத்தம் செய்வதற்கான கருவி, இணைப்பு எதுவும் இல்லாமல் விடியோவை வைத்து ஆடியோவாக மாற்றுவது போன்று பல்வேறு அறிவியல் சார்ந்த கண்டிபிடிப்புகள் சிறப்பாக இருந்தன. இந்த மாணவர்களுக்கு எனது பாராட்டுகள். இது போல் அனைத்து மாணவர்களாளும் கண்டுபிடிக்க முடியும்.




இந்தப் படைப்பாற்றல், புரிந்துணர்வு, ஒருங்கிணைந்து செயல்படுதல் போன்றவற்றை மாணவர்கள் தொடர்ந்து கடைப்பிடித்தால் எதிர்காலத்தில் விஞ்ஞானிகளாகவும், பேராசிரியர்களாகவும், தலைவர்களாகவும் உருவாகுவர் என நம்புகிறேன். இதனால் இந்திய நாட்டின் பெருமை உலகம் முழுவதும் பேசப்படும். அறிவியல் என்றால், வைபை, கைப்பேசி, செயற்கைக்கோள் போன்றவையே நமக்கு வசதியான சூழலை உருவாக்கித் தந்ததாக நாம் நினைக்கிறோம். ஆனால், இது பெரிய விஷயமல்ல. அறிவியல் என்பது வாழ்க்கையைப் பாதுகாக்கிறது. இந்தப் பூமியின் நாகரிகத்தை நீட்டிக்கச் செய்கிறது. நாம் இப்போது இவ்வளவு தொழில்நுட்பங்களுடன் வாழ்கிறோம் என்றால், அதற்கு அறிவியல்தான் காரணம். கலை, சட்டம் ஒழுங்கு உள்பட எல்லாவற்றிலும் அறிவியலை சார்ந்துதான் இருக்கிறோம். பாதுகாப்பான வாழ்க்கை வாழ்வதற்கு அறிவியல் மட்டுமே தீர்வு. மாணவர்கள் சிறு வயது முதல் அறிவியல் பாடத்தில் கற்க வேண்டும். அதில் நாம் புதிய தொழில் நுட்பங்களை கண்டறிய கனவு காணவேண்டும். அதனை செயலில் காட்ட வேண்டும் என்றார் .




துணைவேந்தர் வி. திருவள்ளுவன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பதிவாளர் (பொறுப்பு) க. சங்கர், அறிவியல் புல முதன்மையர் ரெ. நீலகண்டன், கடல்சார் அறிவியல் பள்ளிகள் புல முதன்மையர்  இர. ஆர்தர் ஜேம்ஸ், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சி. திலகவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக,குழந்தைகள் நலக் குழுத் தலைவர் வி. உஷா நந்தினி வரவேற்றார். இறுதியாக வி. பெண்கள் மன்றத் தலைவர் வெ. லதா நன்றி கூறினார்.