தஞ்சாவூர் அருகே பைக் மீது லாரி மோதியதில் இரண்டு வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மற்றொரு வாலிபர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



தஞ்சாவூர் அருகே அன்னப்பன்பேட்டை கீழத்தெருவைச் சேர்ந்த கர்ணன் மகன் அஜய் (25), கருப்பையன் மகன் சத்தியமூர்த்தி (23), செந்தமிழ் மகன் மணியரசன் (24) ஆகிய மூவரும் பைக்கில் தஞ்சாவூர்- விக்கிரவாண்டி புதிய புறவழிச்சாலையில் அன்னப்பன்பேட்டை- கூடலூர் இடையே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது புறவழிச்சாலை அமைக்கும் பணிக்காக கிராவல் மண் எடுத்து வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில் அஜய், சத்தியமூர்த்தி இருவரும் உடல் நசுங்கி அதே இடத்தில் இறந்தனர். மணியரசனை படுகாயமடைந்தார். தகவலறிந்த தாலுகா போலீசார் விரைந்து வந்து இறந்தவர்கள் உடலை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த மணியரசனை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.




குளத்தில் மூழ்கி வாலிபர் பலி


பேராவூரணி அருகே புனல்வாசல் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். தச்சுத் தொழிலாளி. இவரது மகன் ஹரிஹரன் (19). இவர் சம்பவத்தன்று இதே பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றார். அப்போது குளத்தில் மூழ்கி  மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த தகவலின் பேரில் திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



அரசு மருத்துவமனையில் தீ விபத்து

பேராவூரணி அரசு மருத்துவமனையில் மின் கசிவு காரணமாக நோயாளிகளை பரிசோதிக்கும் அறையில் இருந்த மின்விசிறி தீப்பிடித்து எரிந்தது. இதனால் நோயாளிகள், மருத்துவர்கள் பதறி அடித்து வெளியே ஓடினர். உடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் பேராவூரணி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.  

தீ விபத்து காரணமாக பேராவூரணி அரசு மருத்துவமனையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. மின்சாரம் நிறுத்தப்பட்டதால் நோயாளிகளுக்கு கணினியில் பதிவு சீட்டு வழங்கும் பணி பாதிக்கப்பட்டது. இதனால் சிகிச்சைக்காக வந்திருந்த நூற்றுக்கணக்கான நோயாளிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.  

பேராவூரணி அரசு மருத்துவமனை கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் இதுவரை மராமத்து பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததே இந்த தீ விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. எனவே மருத்துவமனையை முற்றிலும் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.