தஞ்சாவூர்: திருச்சி மத்திய மண்டலத்தில் போலீசாரால் கைப்பற்றப்பட்ட 1,145 கிலோ கஞ்சா தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அயோத்திப்பட்டியில் நவீன இயந்திரம் மூலம் தீவைத்து அழிக்கப்பட்டது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கடந்த ஓராண்டு காலத்தில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை, நீதிமன்ற உத்தரவின்படி நேற்று தீயிட்டு அழிக்கப்பட்டது.
இதற்காக தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அயோத்திப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவ கழிவுகள் அழிக்கும் கூடத்தில், இந்த கஞ்சாவை அழிக்க அந்தந்த மாவட்டங்களில் உள்ள போலீசார் மூட்டைகளாக கொண்டு வந்தனர். பின்னர் தஞ்சாவூர் சரக டிஐஜி., ஜியாவுல் ஹக், கஞ்சா மூட்டைகளை பார்வையிட்டு, அந்த மாவட்ட போலீசாரிடம் விவரங்கள் கேட்டறிந்தார்.
பின்னர் போலீசார் அனைவரும் போதை பொருள் தடுப்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து கஞ்சாவை அழிக்கும் பணியை டிஐஜி கொடியசைத்து தொடங்கி வைத்து, அதற்கான இயந்திரத்தில் கஞ்சா பண்டல்களையும், மூட்டைகளையும் போட்டார்.
தொடர்ந்து நவீன இயந்திரத்தில் கஞ்சா முழுவதும் தீயிட்டு அழிக்கப்பட்டது. இப்பணியில் திருச்சி மாநகர காவல் ஆணையர் விவேகானந்த சுக்லா, ஏடிஎஸ்பிக்கள் தஞ்சாவூர் முத்தமிழ்செல்வன், புதுக்கோட்டை சுப்பையா, பெரம்பலூர் பாலமுருகன், கரூர் பிரபாகரன், டிஎஸ்பிக்கள் நாகை முத்துக்குமார், திருவாரூர் இமானுவேல் ராஜ்குமார், அரியலூர் தமிழ்மாறன் மற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிருபர்களிடம் தஞ்சாவூர் சரக டிஐஜி., ஜியாவுல் ஹக் கூறியதாவது: மத்திய மண்டலத்தில் கடந்த ஓராண்டு காலத்தில் போலீஸார் மூலம் 2,899 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,625 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் நீதிமன்ற உத்தரவைப் பெற்று 1,145 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் காவல் சரகத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் கண்டறிப்பட்டு, கைது செய்யப்பட்டு, அவர்களது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் கஞ்சா கடத்துவதை தடுக்க தீவிர கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் அருகே கஞ்சா விற்பனையை கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற திட்டத்தை தமிழக முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் அண்மையில் தொடங்கி வைத்தாா். தமிழ்நாட்டில் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்பைத் தடுக்கும் வகையிலும், போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவா் மீது நடவடிக்கை எடுக்கும் வகையிலும், போதைப் பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் பற்றி இளைய தலைமுறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
போதைப் பொருள் பிரச்னை என்பது உள்ளூா் பிரச்னையாக இல்லாமல் உலகம் தழுவிய பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலக நாடுகள் எல்லாம் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு படாத பாடுபடுகின்றன. கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டும் போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் போதைப் பொருள்கள் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதும் அவற்றைப் பயன்படுத்துவோா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதும் போதைப் பொருள் குற்றங்கள் குறித்த 2021-ஆம் ஆண்டின் ஐ.நா. சபை அறிக்கை மூலம் தெரியவருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.