தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் காவிரி கரையில் அமைந்துள்ள 30ஆவது சிவத்தலமாகும்.
வரகுண பாண்டியன் அருகில் உள்ள காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கிவிட்ட நேரத்தில் அரசன் குதிரை மீதேறி திரும்பி வந்து கொண்டு இருக்கும் போது வழியில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு அந்தணன் குதிரையின் காலில் மிதிபட்டு இறந்துவிட்டான். இச்சம்பவம் அவனறியாமல் நடந்திருந்தாலும் ஒரு அந்தணனைக் கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. அந்தணின் ஆவியும் அரசனைப் பற்றிக்கொண்டது. சிறந்த சிவபக்தனான வரகுண பாண்டியன் மதுரை சோமசுந்தரரை வணங்கி இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மதுரை சோமசுந்தரக் கடவுளும் அரசனுடைய கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார்.
எதிரி நாடான சோழ நாட்டில் உள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அரசனுக்கு சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது. சோழ மன்னனுடன் போருக்குச் சென்ற வரகுண பாண்டியன் சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான். அப்போது திருவிடைமருதூர் சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான். வரகுண பாண்டியனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்பற்றி கோவிலினுள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தன. ஆனால் திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டு அவனுக்கு அருள் புரிந்தார். அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பண்டியநாடு திரும்பினான்.
இதை நினைவுகூறும் வகையில் இன்றளவும் இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று மேற்கிலுள்ள அம்மன் சந்நிதி கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.இத்தகைய சிறப்பு பெற்ற திருவிடைமருதூரில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான பிரகத் சுந்தரகுசாம்பிகை உடனாகிய மகாலிங்கசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தைப்பூச விழாவை முன்னிட்டு 5 தேரோட்டம் நடத்தப்படுவது வழக்கம்.
கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக தேரோட்டம் தடை செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் கவலை அடைந்தனர். இந்த நிலையில் இந்த ஆண்டு தைப்பூச விழாவை முன்னிட்டு, மகாலிங்கசுவாமி கோயிலில் கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழாவின் முக்கியமாக 5 தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை முதலில் விநாயகர், வள்ளி, தெய்வயானை உடனாகிய முருகன், மகாலிங்க சுவாமி, பிரகத் சுந்தரகுசாம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து சுவாமிகளும் தனித்தனியாக தேரில் எழுந்தருளினர்.
இதனை தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டு கொடியசைத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் அரசு தலைமை கொறடா கோவி.செழியன், மயிலாடுதுறை தொகுதி எம்பி. செ.ராமலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அரசின் விதிமுறைகளை கடைபிடித்து பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவிலின் நான்கு வீதிகளில் வலம் வந்த தேர்கள் 3 மணியளவில் நிலையை அடைந்தன. தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.