தஞ்சாவூர்: தென்னைய வச்சா இளநீரு பிள்ளைய பெத்தா கண்ணீரு. பெற்ற பிள்ளையை விட தென்னம்பிள்ளை நமக்கு அதிக நன்மைகளை தரும் என்ற பாடல் வரியின் கருத்து எக்காலத்திற்கும் பொதுவானது. இளநீர் மட்டுமல்ல முழு மரமே நமக்கு ஏராளமான நன்மைகளை தருகிறது. முக்கியமாக தென்னங்குருத்து உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை அளிக்கும் ஒன்றாகும்.


பாரம்பர்ய உணவு மீதான விழிப்பு உணர்வு


இயற்கை உணவு, பாரம்பர்ய உணவு மீதான விழிப்பு உணர்வுக்குப் பிறகு இயற்கையான உணவுப்பொருள்கள் அனைத்துக்கும் மக்கள் மத்தியில் ஒரு புது மவுசு வந்திருக்கிறது. உச்சி தென்னை மரத்துக்குள் இருக்கும் தென்னங்குருத்துக்கும் அப்படிதான் ஒரு கிராக்கி ஏற்பட்டு, அதன் விற்பனை தஞ்சாவூரில் அமோகமாக நடந்து வருகிறது.


தென்னங்குருத்தின் விற்பனையும் அமோகம்


பொதுவாகத் தென்னை மரத்தில் இருக்கும் அனைத்துப் பொருள்களும் மனிதர்களுக்குக் குளிர்ச்சி ஏற்படுத்தும் தன்மை உள்ளது. இளநீர், தேங்காய், தென்னங்குருத்து, பாலை என்று தென்னையில் உள்ள அத்தனைப் பொருள்களும் குளிர்ச்சியை ஏற்படுத்தி, மனிதர்களுக்கு பல நன்மைகளைப் அளிக்கின்றன. அதனால், ரசாயன குளிர்பானங்களை அருந்தி வந்த இளைஞர்கள் இப்போது இளநீர், வெள்ளரி, தர்பூசணி என்று இயற்கை குளிர்ச்சி உணவுப்பொருள்களை சாப்பிடத் தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில், தென்னங்குருத்தின் விற்பனையும் தஞ்சாவூர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


வயிற்றுப்புண், கல் அடைப்புக்கு நல்லதுங்கோ!!!!


பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, லோக்கல் பகுதிகள்ன்னு தென்னை தோப்புகளை அழிக்கும் இடங்களில் இந்த குருத்துகளை பணம் கொடுத்து திருச்சிக்கு எடுத்துக்கிட்டு வர்றாங்க. அங்கிருந்து தஞ்சைக்கு எடுத்துக்கிட்டு வந்து வியாபாரம் நடக்கிறது. இந்த தென்னங்குருத்தைச் சாப்பிட்டா உடம்பில் குளிர்ச்சி ஏற்படும். சூடு குறையும். அதோடு, இந்த தென்னங்குருத்துக்கு வயிற்றுப்புண், கல் அடைப்பு, தோல்வியாதிகள், தைராய்டு, முகப்பரு, பசியின்மை, கர்ப்பப்பை கோளாறு, வெள்ளைப்படுதல், மாதவிடாய், சர்க்கரை நோய், நரம்புத் தளர்ச்சி பிரச்னைனு பல நோய்களும் குணமாகும். உடம்புக்கு கேடு தரும் கண்டகண்ட நொறுக்குத்தீனிகளை தின்பதை விட்டுவிட்டு இந்தத் தென்னங்குருத்துகளை வாங்கிச் சாப்பிடலாம். குறிப்பாகக் குழந்தைகளுக்கு இதுபோன்ற இயற்கை உணவுப்பொருள்களைச் சாப்பிடப் பழக்கலாம்


ஏராளமான மருத்துவக்குணங்கள் இருக்கு


நாம் பயணம் செய்யும்போது சாலையோரங்களில் தள்ளு வண்டியில் தென்னங்குருத்து விற்பனை செய்வதை பார்த்து அதை ஒரு பொருட்டாகக் கூட எடுத்துக் கொள்ளாமல் கடந்திருக்கலாம். அதற்கு காரணம் அதன் மருத்துவ குணங்களை அறியாமல் இருப்பதே. இனிமே அப்படி கடந்து போக முடியாது. 


முக்கியமாக‌ இளநீரைப் போல  தென்னங்குருத்து உடல் சூட்டை தணிப்பதோடு வயிற்றுப்புண், கல்லடைப்பு, தைராய்டு, மஞ்சள் காமாலை, பசியின்மை, தோல் வியாதி, மாதவிடாய் பிரச்சினைகள், சர்க்கரை நோய் என மனித உடலில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வாகவும்,கலப்படம் செய்ய முடியாத சுவையான இயற்கையான உணவுப் பொருளாக இருக்கிறது.‌ பொதுவாக கேரளாவிலும், தமிழகத்தில். கோயம்புத்தூர், கரூர் திருப்பூர், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பகுதியிலும்‌ மதுரையிலும் அதிக அளவில் சாலை ஓரங்களில் தென்னங்குருத்து விற்பனை  நடைபெறும். 




தஞ்சை மக்கள் கொடுக்கும் அட்டகாசமான வரவேற்பு


ஆனால் மற்ற மாவட்டங்களில் சற்று குறைவாகத் தான் இருக்கும். தஞ்சையில் பெரிதளவில் இதன் விற்பனையைப் பார்க்க வாய்ப்பே இல்லை. ஒரு சிலர் மட்டுமே சில நேரங்களில் விற்பனையில் ஈடுபடுவர். தற்போது திருச்சியிலிருந்து வந்து இதை விற்பனை செய்யடுக்கிறது. குறிப்பாக தஞ்சையில் தற்போது ஏப்ரல், மே மாதங்களில் அடிக்கும் வெயிலைப் போல அசால்ட்டாக 100 டிகிரியைத் தாண்டி வெயில் பதிவாகி வந்து கொண்டு இருக்கிறது. கடந்த சில நாட்களாகதான் இந்த நிலை மாறி அவ்வபோது மழை பெய்து வருகிறது மழை பெய்தாலும் தென்னங்குருத்து விற்பனை கனஜோராகதான் நடக்கிறது. இந்த நிலையில் தஞ்சை மக்கள் தென்னங்குருத்து விற்பதை கண்டு ஓ...  "தென்னங்குருத்து கிடைக்கிறதா" என வாகனங்களை நிறுத்தி சட்னெ வாங்கி சாப்பிடுகின்றனர். வீட்டிற்கு வாங்கி செல்கின்றனர்.


எது எப்படியோ.. இது போன்ற கலப்படம் இல்லாத  சத்தான உணவுப் பொருட்களை‌‌ மக்கள் தேடி உண்ணும் காலம் மாறி வருவது நல்லதற்குதான்.