தஞ்சாவூர்: அரசாணை எண் 243 ஐ ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சாவூரில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
அரசாணை எண் 243ஐ ரத்து செய்ய வேண்டும்
அரசாணை எண் 243ஐ ரத்து செய்ய வேண்டும், பதவி உயர்வு தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கு முடியும் வரை மாறுதல் கலந்தாய்வு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும், கலந்தாய்வு வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை (டிட்டோஜாக்) குழு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
கண்டன ஆர்ப்பாட்டம்
டிட்டோ ஜாக் ஒருங்கிணைப்பாளர் மதியழகன் தலைமை வகித்தார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் சத்தியசீலன், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ராகவன் துரை, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் கண்ணதாசன், மாவட்ட செயலாளர் குமார், தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் எழிலரசன் மற்றும் பலர் கண்டன உரையாற்றினர்.
தொடர்ந்து பழைய கோர்ட் ரோடு பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு வாக்குறுதிகளை வலியுறுத்தி கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கும்பகோணம் வட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.
பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்தணும்
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 21 மாத கால நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை வழங்கிட வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள் உள்ளிட்ட சிறப்பு கால முறை ஊதியம் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் வட்ட செயலாளர் பிரபாகரன், வருவாய்த்துறை அலுவலக சங்க வட்டத் தலைவர் செந்தில்குமார், நுண்கதிர் துறை ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் செல்வம், வணிகவரித்துறை ஊழியர் சங்க வட்ட துணைத் தலைவர் கோபிநாத், ஓய்வூதியர் சங்க கும்பகோணம் வட்டத் தலைவர் துரைராஜ் வட்ட செயலாளர் பக்கிரிசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வட்ட பொருளாளர் மதியழகன் நன்றி தெரிவித்தார்