புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கன்னியாகுமரியிலிருந்து டெல்லி வரை ரத யாத்திரை நடத்தப்படும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் ரங்கராஜன் பேட்டியளித்தார்.
திருவாரூரில் உள்ள வர்த்தக சங்க கூட்டரங்கில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பணி நிறைவு பாராட்டு விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழா மாவட்டத் தலைவர் ஈவெரா தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளரும் அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் இணை பொது செயலாளருமான ரங்கராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது.
கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சத்துணவு துறையிலிருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் என்று மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி அதில் இருந்து விடுபட்டு இருக்கிறோம். எனவே காலை உணவு திட்டத்தில் ஆசிரியர்களையும் தலைமை ஆசிரியர்களையும் ஈடுபடுத்த தமிழக அரசு முயற்சிக்கக் கூடாது என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோன்று ஓய்வு ஊதியம் வேண்டி மத்திய அரசுக்கு நாங்கள் ஒரு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி அகில இந்திய ஆசிரியர் கூட்டணியானது வருகின்ற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி கன்னியாகுமரியில் இருந்து மற்றும் மூன்று திசைகளிலும் சேர்ந்து நான்கு திசைகளிலிருந்து ரத யாத்திரை புறப்பட இருக்கிறது. ஓய்வூதியத்தை மத்திய அரசு எப்படி நாடாளுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றி கொண்டு வந்தார்களோ அதைபோன்று நாடாளுமன்றத்திலேயே சட்டத்தை நிறைவேற்றி அதை நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக தான் நாங்கள் ரத யாத்திரை மேற்கொள்ள இருக்கிறோம்.
தமிழக அரசின் 309 ஆவது தேர்தல் வாக்குறுதியாக ஆட்சிப் பொறுப்பேற்றுடன் பங்களிப்பு உதயத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் என்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்.அந்த வாக்குறுதியை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.அப்படி நிறைவேற்றாத பட்சத்தில் மத்திய அரசை வலியுறுத்தி மாபெரும் ரத யாத்திரை யை ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ல் கன்னியாகுமரியில் தொடங்கி புது டெல்லி வரை சென்று உலக ஆசிரியர் தினமான அக்டோபர் ஐந்தாம் தேதி மாபெரும் மாநாட்டினை புது டெல்லியில் நடத்தவிருக்கிறோம்.
சமீபத்தில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அனைத்து சங்கங்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி கொடுத்ததின் அடிப்படையில் இதுவரை எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படாமல் ஆசிரியர்களை துன்புறுத்தக்கூடிய வகையில் யெமிஸ் வலைதளத்தில் பல்வேறு புள்ளி விவரங்களை அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும் என்று கருத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.அதனால் ஆசிரியர்கள் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகி விருப்ப ஓய்வு பெற்று செல்லக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.கற்றல் கற்பித்தல் பணி பள்ளியிலே பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே இந்த பணியினை படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.இவற்றையெல் லாம் நிறைவேற்றவில்லை என்றால் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு கூடி விரைவில் போராட்டத்தை அறிவிக்கும் என தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோன்று 2189 பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு மூன்று மாத காலம் ஆகியும் இதுவரை புத்தகங்கள் வழங்கப்படவில்லை.உடனடியாக புத்தகங்களை வழங்க வேண்டும்.அதேபோன்று தமிழக அரசு முன்னாள் மாணவர்கள் குழுவை உருவாக்கி அதையும் அப்டேட் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.முன்னாள் மாணவர்கள் பட்டியலை மட்டுமே ஆசிரியர்கள் தயார் செய்ய முடியும்.அப்பேட் செய்வது போன்ற விஷயங்களை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்தார்.