தஞ்சாவூர்: பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Continues below advertisement

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 15 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ந் தேதி வகுப்பறைக்கு சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்த நாகை மாவட்டம் ஆலத்தூரை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (46) என்பவர் சென்றார். 

அப்போது 2 சிறுமிகள் நோட்டில் ஆசிரியரிடம் கையெழுத்து வாங்குவதற்காக சென்றபோது தனது அருகில் இருவரையும் வர சொல்லி, தன் கையில் வைத்திருந்த பேனாவை வேண்டுமென்றே கீழே போட்டு சிறுமி ஒருவரை குனிந்து எடுக்க சொல்லி பாலியல் நோக்கத்தோடு பாலசுப்பிரமணியம் பார்த்தார். மேலும் சிறுமிகள் இருவரையும் வகுப்பறையில் வைத்து கதவை சாத்தியதால் அதிர்ச்சி அடைந்த சிறுமிகள் சத்தம்போட்டனர்.

Continues below advertisement

இதனால் கதவை திறந்துவிட்டதுடன், அந்த வழியாக சென்ற சிறுவனை அழைத்து, சிறுமிகள் இருவரையும் காட்டி பாலியல் நோக்கத்தோடு பேசி மனஉளைச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஒரு சிறுமி தனது பெற்றோரிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் பாபநாசம் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்தார்.

இந்த புகாரின் பேரில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பகவதி சரணம் போக்சோ வழக்கில் பாலசுப்பிரமணியத்தை கைது செய்து தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். இந்த வழக்கில் விசாரணை முடிக்கப்பட்டு பாலசுப்பிரமணியம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதி தமிழரசி விசாரணை செய்து பாலசுப்பிரமணியத்திற்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.75 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் திறம்பட பணிபுரிந்த அரசு வக்கீல் மற்றும் தற்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா, கோர்ட் ஏட்டு இளையராணி ஆகியோரை மாவட்ட எஸ்.பி., ராஜாராம் பாராட்டினார்

வாலிபர் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

தஞ்சை வடக்குவாசல் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் ஜெயபால்(வயது36). இவர் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந் தேதி காவேரி சிறப்பு அங்காடி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது தஞ்சை சீனிவாசபுரத்தை சேர்ந்த தொழிலாளியான முனியாண்டி(42) என்பவர் குடிபோதையில் வந்தார். பின்னர் இவர் ஜெயபாலிடம் பணம் கடனாக கேட்டார். ஆனால் அதற்கு பணம் கொடுக்க ஜெயபால் மறுத்துவிட்டார்.

இதனால் இருவருக்கும் மத்தியில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முனியாண்டி சாதி பெயரை சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், தான் கையில் வைத்து இருந்த பீர்பாட்டிலால் ஜெயபாலின் தலையில் பலமாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஜெயபாலை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பாக ஜெயபால் மகள் முனிஸ்வரி தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இதற்கிடையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த ஜெயபால் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்து முனியாண்டியை கைது செய்தனர். பின்னர் அவரை தஞ்சை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் விசாரணை முடிக்கப்பட்டு 2019-ம் ஆண்டு மே மாதம் 6-ந் தேதி கோர்ட்டில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை நீதிபதி குமரேசன் விசாரணை செய்து முனியாண்டிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதத்தொகையும், அபராதம் கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் திறம்பட பணிபுரிந்த டிஎஸ்பி சோமசுந்தரம், கோர்ட் போலீஸ் ஏட்டு செந்தில்குமார் ஆகியோரை மாவட்ட எஸ்.பி., ராஜாராம் பாராட்டினார்.