தஞ்சாவூர்: தவறான தகவலை அளிக்கும் வரி செலுத்துவோர் மீது அபராதம் விதிக்க வழிவகை உள்ளது என்று எச்சரிக்கை விடுத்து பேசினார் வருமான வரித் துறை கூடுதல் ஆணையர் நித்யா.


தஞ்சாவூரில் வருமான வரியை முன்கூட்டியே செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் நித்யா பங்கேற்று பேசியதாவது:


வருமான வரியை முன்கூட்டியே செலுத்துவோர் தோராயமான தொகையைச் செலுத்தலாம். வரித்தொகை எவ்வளவு இருக்கும் என்பதைக் கணிக்க முடியாவிட்டாலும், தோராயமாக 90 சதவீதம் செலுத்தி விடலாம். இதை மொத்தமாகச் செலுத்துவதற்கு சிரமமமாக இருந்தால், ஜூன் 15, செப்டம்பர் 15, டிசம்பர் 15, மார்ச் 15 ஆகிய 4 தவணைகளில் செலுத்திக் கொள்ளலாம். இதற்கான வாய்ப்பும் உள்ளது.


பொருளாதார வளர்ச்சியில் உலக அளவில் இந்தியா நான்காமிடத்துக்கு முன்னேறி விட்டதாக நாம் பேசி வருகிறோம். ஆனால், பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ள அளவுக்கு வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்பது கேள்விக்குறிதான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். நடுத்தர, ஏழை மக்கள் வளர்ந்துள்ளனரா என்பதைக் காட்டும் குறியீடாக வருமான வரி இருக்கிறது. எனவே, வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும்.


நம்முடைய வருவாயில் மற்ற செலவுகளுக்கு ஒதுக்கீடு செய்வதைப் போன்று, வருமான வரிக்கும் ஒதுக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். நம் நாட்டில் பாதுகாப்பாக வியாபாரம் செய்யக்கூடிய சூழ்நிலையை அரசு உருவாக்கி கொடுத்து இருக்கிறது. அரசின் கஜானாவுக்கு நாம் ஒவ்வொருவரும் பங்களிப்பு செய்ய வேண்டும். அதற்கு வருமான வரியை முறையாக செலுத்த வேண்டும்.


ஒவ்வொருவருடைய பண பரிவர்த்தனையும் கணிக்காணிக்கப்படுகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எனவே, வருமான வரியைத் தாக்கல் செய்யும்போது, சரியான தகவலை குறிப்பிட வேண்டும். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக தவறான தவல்களை அளித்து பலர் செலுத்திய வரித்தொகையைத் திரும்பப் (ரீபண்ட்) பெற்றுள்ளனர். குறிப்பாக இந்த மண்டலத்தில் இதுபோன்ற மோசடி அதிகமாக இருப்பதால், வருமான வரி வசூல் எதிர்மறையாக உள்ளது.


வரி செலுத்துவோர் அளித்த தகவல் தவறானது என்பது தெரிந்தால், 10 ஆண்டுகள் கழித்து கூட அபராதம் விதிக்கவும், சிபிஐ விசாரணை மேற்கொள்ளவும் சட்டத்தில் வழிவகை உள்ளது. எனவே, ஆடிட்டர்கள் தங்களை தேடி வருபவர்களிடம் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.


வருமானத்துக்குரிய நியாயமான வரியை சரியான நேரத்தில் செலுத்தினால் போதும். கூடுதலாகவோ, குறைவாகவோ நீங்கள் கட்ட வேண்டிய அவசியம் இல்லை. வருமான வரியை நாட்டின் வளர்ச்சிக்காகவும், வருங்கால சந்ததியினருக்காகவும் செலுத்துகிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


இதில் வருமான வரித் துறைத் துணை ஆணையர் எஸ். சீனிவாசன், வருமான வரித் துறை அலுவலர்கள் இரா. வில்விஜயன், மஞ்சுளா, பட்டைய கணக்காளர் அ. குகனேஸ்வரன், அகில இந்திய வரி ஆலோசகர்கள் சங்க கூட்டமைப்புத் தலைவர் இரா. ரவிச்சந்திரன், தஞ்சாவூர் தொழில் வர்த்தக சங்கத் தலைவர் பழ. மாறவர்மன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.