நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் கோடிக்கணக்கான மக்கள் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி ஒன்றே தீர்வு என மத்திய மாநில அரசு முழுவீச்சில் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரம் காட்டி கோவாக்ஸின், கோவிஷுல்டு என்ற இரண்டு தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் மூலமாக வழங்கி பொதுமக்களுக்கு செலுத்தி வருகின்றது.




அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் மாவட்டங்கள் தோறும் சுகாதாரத்துறை சார்பில் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது தமிழ் நாட்டில் மூன்றாவது அலை பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் 18 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அரசு அதிவேகமாக தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தி வருகிறது. அதனையடுத்து வருகிற 12 ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தில் 50 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்த இலக்கு நிர்ணயித்து உள்ளதாக மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.




மயிலாடுதுறை மாவட்டத்தில் வரும் 12 ஆம் தேதி கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அதனையொட்டி முன்னேற்பாடுகள் குறித்து ஊராட்சி தலைவர்கள், அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 241 ஊராட்சி, 2 நகராட்சி, 4 பேரூராட்சிகளிலும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு 50 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திகொண்டு இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X



இந்த தடுப்பூசியால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும், கர்ப்பிணி பெண்கள், மாற்றுதிறனாளிகள், 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் கட்டாயம் தடுப்பூசி போடடுக்கொள்ள வேண்டும். அதற்கு தேவையான மருந்துக்கள் கையிருப்பில் உள்ளது என்றார். காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை 12 மணிநேரம் அனைத்து பகுதிகளிலும் மாபெரும் தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதற்கு மக்கள் பிரதிநிதிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் வைத்தார்.


இந்து வழிபாட்டுக்கு எதிராக திமுக’ -பாஜக மாநில பொதுச்செயலாளர் வரதராஜன்!