விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று பாதிப்பை தடுக்கும் வகையில், பொது இடங்களில் சிலை வைக்கவோ மற்றும் ஊர்வலமாக எடுத்து செல்லக்கூடாது என தமிழக அரது தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை மீறி சிலை வைத்தாலோ, ஊர்வலமாக எடுத்து சென்றாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்திருந்தனர். அதே சமயம் பொதுமக்கள் வீடுகளில் விநாயகர் சிலையை வைத்து வழிபடலாம், அந்த விநாயகர் சிலையை தனி நபர் எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைக்கலாம் என தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
இந்நிலையில் தஞ்சாவூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் இந்து முன்னனி அமைப்பினர், திடீரென சீனிவாசபுரம், விளார், பர்மா காலனி, ஒத்தக்கடை, ரயிலடி, வல்லம் ஆகிய பகுதிகளில் சுமார் 5 அடி உயரம் கொண்ட 7 விநாயகர் சிலையை வைத்தனர். பின்னர் அந்த விநாயகருக்கு, அவல் பொரி, கடலை, வழைப்பழம், தேங்காய் உடைத்து, தீபதூபம் காண்பித்தனர். இது குறித்து தகவலறிந்த வருவாய்த்துறை, காவல் துறை, அறநிலையத்துறை ஆகியோர், விநாயகர் சிலைகள் உள்ள பகுதிக்கு வந்து, சிலை அருகிலுள்ள கோயிலில் வைத்தனர். ஆனால் சீனிவாசபுரத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை மட்டும், வாகனத்தில் ஏற்றி கொண்டு பலத்த போலீசார் பாதுகாப்புடன், எடுத்து சென்று, தஞ்சாவூர், மேலவீதியுள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்குள் வைத்தனர்.
அந்த சிலையின் அருகில் அறநிலையத்துறை அலுவலர்கள் இருவரும், கோயிலுக்கு வெளியில் 4 போலீசாரும் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சீனிவாசபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகரை மட்டும் வாகனத்தில் ஏற்றி கொண்டு கோயிலுக்குள்ளே வைத்து, போலீசார் பாதுகாப்பு அளித்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் 19 இடங்களில் அனுமதியின்றி, தடையை மீறி விநாயகர் சிலையை வைத்தனர். தொடர்ந்து ஒரு அடி உயரமுள்ள களிமண்ணாலான 1008 விநாயகர் சிலையை, 5 வது ஆண்டு கும்பகோணம் பகுதியிலுள்ள வீடுகளில் வழங்கினர்.
மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் குருமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், கும்பகோணத்தில் வைக்கப்பட்டுள்ள விநாயகர், கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றி கொள்வது எப்படி என, விநாயகர் கையில் மாஸ்க்குடன் ஆசி வழங்கினார். இந்த விநாயகரை தரிசனம் செய்யும் பொது மக்கள், கண்டிப்பாக மாஸ்க் அணிவதை கட்டாயமாக்குவார்கள். தமிழக அரசு வீடுகளில் வைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளது. தெய்வ பக்தி நிறைந்த நகரமாக கும்பகோணத்தில் இல்லத்தில் வைத்து வழிபட கூடிய வகையில் விநாயகர் சிலைகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இதனால் நாத்திக கொள்கைகள் முறியடிக்கப்பட்டு இல்லந்தோறும் தெய்வபக்தி தழைத்தோங்க செய்யும். விடுதலைப் போராட்டத்திற்கு விநாயகர் வழிபாடு பெரும் பங்காற்றியது நினைவு கூறும் வகையில் உள்ளம் தோறும் தேசபக்தி என்ற கோட்பாட்டோடு வீடு தோறும் விநாயகர்,. இல்லந்தோறும் தெய்வபக்தி, உள்ளம் தோறும் தேசபக்தி என்ற தலைப்பில் விநாயகர் சதுர்த்தி விழா இந்துக்களை ஒற்றுமை படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. கும்பகோணம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள 19 சிலைகள், வரும் 11ஆம் தேதி மாலை 6 காவிரியாறு பகவத்படித்துறையில் கரைக்கப்படுகிறது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர் விஜய் பிரபு. மாவட்டச் செயலாளர் அநபாயன். நகர இளைஞரணி தலைவர் நாகராஜ். உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் எனும் பெரியகோயிலில் பிரகாரத்திலுள்ள விநாயகர் கோயிலுள்ள விநாயகருக்கு, சுமார் 25 கிலோ எடையில் சந்தானத்தாலான அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விநாயகதர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திலுள்ள அனைத்து விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.