வெளிநாட்டில் உடல்நிலை பாதிக்கப்பட்டு கோமா நிலையில்,சிகிச்சை பெற்று வரும் தனது கணவரை அங்கிருந்து தாயகத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று

  மனைவி,  கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.


தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் பல பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை அளித்தனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் திருவிசநல்லூர் சங்கரநாதர் குடிகாடு பகுதியை சேர்ந்த வீரம்மாள் கூறுகையில்,


 



தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்


எனது கணவர் புண்ணியமூர்த்தி (49). எங்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு துபாயில் உள்ள ஒரு ஓட்டலில் எனது கணவர் புண்ணியமூர்த்தி வேலைக்கு சேர்ந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் அவர் துபாய்க்கு சென்றுவிட்டார்.


இந்நிலையில் அங்கு பணியில் இருந்த போது எனது கணவர் மயங்கி விழுந்துள்ளார். தொடர்ந்து அவரை அங்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் எனது கணவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.


நாங்கள் அன்றாடம் உழைத்து கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வருகின்றேன். எங்களது குழந்தையை நல்ல முறையில் திருமணம் செய்து வைக்க வேண்டும், நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று பேசி வந்தார். திடகாத்திரமாக இருந்த எனது கணவருக்கு, திடிரென மயங்கி விழுந்ததில், கோமாவில் சென்று விட்டார் என்று கூறுவதால், எங்கள் குடும்பத்திலுள்ள அனைவரும் மிகுந்த மன வேதனையில் உள்ளோம். நாங்கள் இது குறித்து யாரிடம் செல்வது என்று தெரியாமல் இருந்து வருகின்றோம்.


தந்தையை பார்க்க வேண்டும் என, குழந்தைகள் அழுது வருகின்றனர். கணவரின் நிலை தெரியாமல், யாரும் சாப்பிடாமல்  என்ன நடக்குமோ என்று அச்சத்தில் உள்ளோம். உறவினர்கள் துணைக்கு இல்லாததால், குழந்தைகளுடன் வறுமையில், கணவரை பற்றி யாரிடம் கேட்பது என்று தெரியாமல் இருந்த நிலையில், மாவட்ட கலெக்டரை சந்தித்து, எனது கணவரை, அழைத்து வருவதற்கு உரிய ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கேட்க வந்துள்ளோம்.   எனக்கு போதுமான வசதிகள் இல்லாததால், எனது கணவரை அழைத்து வரமுடியாமல் தவித்து வருகின்றேன். எங்களுக்காக சென்று இந்த நிலைக்கு ஆளாகியுள்ள நிலையில், இங்கு அழைத்து வந்தால், எனது உயிரை கொடுத்தாவது எனது கணவரை காப்பாற்றி விடுவேன்.  எனது கணவரை அழைத்து வருவது தொடர்பாக முதல்வருக்கும் மனு அனுப்ப உள்ளேன்.


 



சிகிச்சையில் இருக்கும் கணவரை மீட்க போராடும் மனைவி


எனவே, உடல்நிலை சரியில்லாத எனது கணவரை துபாயிலிருந்து இந்தியாவிற்கு வரவழைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூலித் தொழிலாளியாக மூன்று குழந்தைகளுடன் இங்கு உள்ள நான் எனது கணவரின் நிலை தெரியாமல் தவித்து வருகிறேன் என்றார்.