தமிழகத்தில் சாலை பணிகளை மேற்கொள்ளும்  போது ஏற்கெனவே போடப்பட்ட சாலைகளை முழுமையாக பெயர்த்து அகற்றிய பின்னரே புதிய சாலை போட வேண்டும் என்ற அறிவிப்பு ஏற்கெனவே தமிழக அரசின் தலைமைச் செயலாலர் இறையன்பு மூலம் வெளியிடப்பட்டு இருந்தது.  இந்த நிலையில் திருவாரூர் நகர் பகுதியில் உள்ள விருப்பாச்சி நடுத்தெரு செங்கம் தியேட்டர் ராம்கி சாலை உள்ளிட்ட சாலைகளை பழுது நீக்கி மேம்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்ததையொட்டி புதிதாக சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. சாலை அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தாலும் தரமற்ற முறையில் சாலை அமைக்கப்பட்டு வருவதாக அறப்போர் இயக்கத்தினர் குற்றம்சாட்டி இருந்தனர். 


 





அதில் உத்தரவுகளை பிறப்பித்தது தலைமைச் செயலாளர் ஒதுங்கிக் கொள்கிறார் அந்த உத்தரவுகளை செயல்படுத்துவது குறித்து எந்த அக்கறையும் யாருக்கும் கிடையாது மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்க வேண்டிய மக்கள் பிரதிநிதிகளுக்கு இது ஒரு பிரச்சினையாகவே தெரியவில்லை என்ற வாசகங்கள் அந்த டுவிட்டர் பதிவில் இடம் பெற்றிருந்தன.



இதனை அறிந்த தலைமைச் செயலாளர் இறையன்பு, திருவாரூர் நகராட்சி ஆணையரிடம் நகராட்சி நிர்வாக இயக்குனரின் மூலமாக அறிக்கை சமர்ப்பிக்க கோரியிருந்தார். அதனடிப்படையில் திருவாரூர் நகராட்சி ஆணையர் பிரபாகரன் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அறிக்கையின்படி திருவாரூர் நகராட்சி நகர்புற சாலை மேம்பாட்டுத் திட்டம் 2021-22 ஆம் ஆண்டின் கீழ் கலையரசன் என்பவரின் நிறுவனத்திற்கு இந்த மாதம் 17ஆம் தேதி சாலை அமைக்கும் பணிகளுக்காக உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் தற்போது சாலை பணிகள் எடுத்து கொள்ளப்பட்டு முதல் பணியாக விருப்பாச்சி நடப்பு தெரு தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 243 மீட்டர் நீளமும் 5 மீட்டர் அகலமும் கொண்ட பழைய சாலையை அப்புறப்படுத்திவிட்டு ஒப்பந்தத்தில் அறிவித்துள்ள அளவின்படி புதிய சாலைகள் அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது ஆனால் ஒப்பந்ததாரர் சாலையைத் தோண்டி அப்புறப்படுத்தாமல் ஏற்கனவே இருந்த தார்சாலை மேற்பகுதியை மட்டும் சுரண்டி எடுத்துவிட்டு அதன்மீது புதிய சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளன.




புகார் வந்த உடனடியாக நேரில் சென்று ஆய்வு செய்து சாலை அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் ஒப்பந்ததாரருக்கு பழைய சாலையை அகற்றிவிட்டு புதிய சாலையை அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது தொடர்ந்து சாலை அமைக்கும் பணியை கண்காணிக்கப்பட்டு பணிகள் முடிந்தவுடன் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் திருவாரூர் நகராட்சி ஆணையர் பிரபாகரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அறப்போர் இயக்கத்தின் தொடர் பதிவு காரணமாக தலைமை செயலாளர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அதற்கான செயல்பாடுகளையும் புகார் வந்த உடன் தொடங்கியுள்ளது சமூக வலைதளங்கள் மட்டுமல்லாது திருவாரூர் மக்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது.