உலக புவி தினத்தையொட்டி ஒரு லட்சம் மரங்கள் வளர்ப்பு திட்டத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கலைக்கல்லூரியில் தொடங்கி வைத்தார்.


தஞ்சை குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி, அறிவியல் கழகம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் ஆகியவை இணைந்து உலக புவி தினத்தையொட்டி மாவட்ட கலெக்டரின் ஒரு லட்சம் மரங்கள் வளர்ப்பு திட்ட தொடக்கவிழா மற்றும் குந்தவை அறிவு திருவிழாவை நடத்தின. கல்லூரி முதல்வர் சிந்தியா செல்வி முன்னிலை வகித்தார். இதில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பங்கேற்று புவி உருண்டையை திறந்து வைத்து அறிவு திருவிழாவை தொடங்கி வைத்தார். மேலும் அவர், கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கல்லூரி மாணவிகள் உற்சாகத்துடன் மரக்கன்றுகளை நட்டனர். தொடர்ந்து நடந்த விழாவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த அரங்கை காரைக்கால் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக பொதுமேலாளர் மாறன் திறந்து வைத்தார். இந்த அரங்கில், எண்ணெய் கிணறு தோண்டும் முறை, கனரக எந்திரங்கள் வேலை செய்யும் விதம் போன்ற தொழில்நுட்பங்கள், நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் ஆகியவை ஒளிப்படமாக காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.




மேலும் பாறை அடுக்குகளின் மாதிரிகள், எண்ணெய் கிணற்றின் மாதிரி ஆகியவையும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இதுகுறித்து மாணவிகள் ஆர்வத்துடன் கேட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டன. இதேபோல் தமிழ்த்துறை, ஆங்கிலத்துறை, வரலாற்றுத்துறை உள்பட அனைத்து துறைகளின் சார்பிலும் தனித்தனியாக அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. இவற்றை அந்தந்த துறை தலைவர்கள் திறந்து வைத்தனர். இந்த அரங்குகள் அனைத்தையும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டார். இதேபோல் அவர், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கையும் பார்வையிட்டார். பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து புத்தக கண்காட்சியை தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனும், கணினி அறிவியல் அரங்கை துணை மேயர் அஞ்சுகம்பூபதியும் திறந்து வைத்தனர். கீழடிஅகழாய்வு தொன்மங்களின் கண்காட்சியை கல்லூரி கல்வி இணை இயக்குனர் அறிவுடைநம்பி திறந்து வைத்தார்.




இதையடுத்து கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் சிந்தியா செல்வி தலைமை வகித்து நடத்தினார். அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் சுகுமாரன் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் சேதுராமன், நெய்வேலி பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்க மாநில கருத்தாளர் பாலகுருநாதன், சென்னை லயோலா கல்லூரி மாற்று ஊடக மைய தலைவர் காளீஸ்வரன், இஸ்ரோ ஓய்வு பெற்ற குழு இயக்குனர் இங்கர்சால் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர். காரைக்கால் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக செயல் இயக்குனர் அனுராக் மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். இதில் உதவி வன பாதுகாவலர் வடிவேல், வனசரக அலுவலர் ஜோதிகுமார், கருணா கவுரி கல்வி மற்றும் வளர்ச்சி நிறுவன மேலாண்மை இயக்குனர் கருணாநிதி, இன்டாக் செயலாளர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளியல்துறை இணை பேராசிரியை மலர்விழி நன்றி கூறினார். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் தமிழடியான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.