தஞ்சாவூர் மாவட்டம்,பேராவூரணியில் மக்களை தேடி முதல்வர் திட்டத்தில் மனுக்களை பெற வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கதறி அழுத இளம்பெண்ணால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பேராவூரணியில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்களை தேடி முதல்வர் திட்டத்தில் மனுக்களை வாங்கும் முகாமில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் மற்றும் பலர் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து 500க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றனர்.
சிறப்பு விருந்தினர்கள் பேசிக்கொண்டிருந்த போது, இளம் பெண் ஒருவர், தன்னுடைய 2 வயது மகனுடன் மேடைக்கு வந்தார். இதனையறியாக, அலுவலர்கள், திடீரென அந்த இளம்பெண், மகனுடன், அமைச்சர் காலில் விழுந்து கதறி அழுதார். பின்னர் தன்னுடைய கைகை கூப்பி, தனக்கும், தன் மகனுக்கும் வாழ்வாதாரம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றோம். அன்றாடம் வாழ்க்கை நடத்துவதற்கே வழியில்லை என்று கண்ணீர் விட்டு, கதறி அழுதார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வாழ்வாதாரம் கேட்டு பல முறை அனைவரிடமும் கேட்டும் எந்த விதமான பலனும் இல்லாமல் உள்ளது. தற்போது தங்களிடம் உதவி கேட்டு வந்துள்ளேன் என்று கண்ணீர் விட்டவாறு தெரிவித்தார்.
அப்போது அந்தப் பெண்ணிடம் அமைச்சர் விசாரித்தபோது அந்தப் பெண்ணின் பெயர் சொப்னாதேவி (22) பி. காம், இரண்டாம் ஆண்டு படிப்பை முடித்தவர் இவருடைய கணவர் பெயர் வெங்கடேசன். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். காலித்து திருமணம் செய்து கொண்டதால், தங்களின் இரு வீட்டாரும், தங்களை கைவிட்டு விட்டதாகவும், தற்போது பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம் கிராமத்தில் இரண்டு வயது ஸ்ரீமன் கைக்குழந்தையுடன் மிகவும் வறுமையான சூழலில், யாருடைய ஆதரவும் இல்லாமல் வாழ்ந்து வருகிறேன் என அமைச்சரிடம் கண்ணீர் விட்டு கதறி அழுதவாறு தெரிவித்தார். இதனை பார்த்த அனைவரும் அப்பெண்ணின் நிலையை கண்டு மன வேதனை அடைந்தனர்.
இவர்களின் வாழ்க்கை சூழ்நிலையை அறிந்த அமைச்சர், மனமுடைந்து,சிறிது நேரம் கண் கலங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். உடனடியாக மாவட்ட கலெக்டரிடம் இவர்களின் நிலை குறித்து அறிந்து இவர்களது வாழ்வாதரம் காத்திட ஒரு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்திட உத்தரவிட்டார். அந்தப் பெண்ணிற்கு ஆறுதல் கூறி, அமைச்சர் அனுப்பி வைத்தார். தாயின் மகனின் நிலையறிந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஸ்ரீமன்னின், தலையை கையை வைத்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனால் சிறிது நேரம் மேடையில் பரபரப்பு ஏற்பட்டது.