உத்தரப்பிரதேசத்தில் காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் ரூபாய் 339 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடக்கி வைத்ததன் காணொலி காட்சிகளை திருவாவடுதுறை ஆதீனத் திருமடத்தில், 24- வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பராமாசாரிய சுவாமிகளுடன் பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் பார்வையிட்டார். 





அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ஆக்கிரமிப்புகளில் உள்ள ஆதீனங்களின் சொத்துக்களை மீட்க மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டுவர வாய்ப்புகள் இல்லை. சொத்துக்களை பாதுகாக்க ஆதீனங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்போம். தமிழ்நாட்டில், துரதிஷ்டவசமாக ஆன்மீகத்தைப் பழித்துப் பேசுகின்ற அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ச்சியாக அரசியல் அதிகாரத்தில் உள்ளனர். இதன் காரணமாக, பல்வேறு கோயில்களில் சிலைகள், நகைகள் கொள்ளையடிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலேயே நூற்றுக்கணக்கான கோயில்கள் சீரமைக்கப்பட வேண்டியுள்ளது. 




தங்களுக்கு தெய்வ நம்பிக்கை இல்லை என்று வெளிப்படையாக சொல்கின்ற முதலமைச்சர், அமைச்சர்கள் எப்படி இந்தக் குறைகளை சரிசெய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. எனவே, இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்கள் நிர்வாகத்தை தெய்வ நம்பிக்கை உடையவர்களிடம் தனியாக வாரியத்தை கொடுக்க வேண்டும். அப்படி வந்தால்தான் அனைத்துக் கோயில்களுக்கும் விடிவுகாலம் பிறக்கும். தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உள்ள கோயில்கள், அதுதொடர்புடைய இடங்கள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றை தமிழ் தமிழ் என்று பேசுகிற தமிழ்நாடு அரசாங்கம் உறுதுணையாக இருந்து ஆதீனங்களை காப்பாற்ற வேண்டும்.




திருவாவடுதுறை ஆதீனம் இல்லாவிட்டால் திருக்குறள் பதிப்பித்தல் நடக்காமல்   போயிருக்கும். அதை சீரமைத்து ஒவ்வொரு அதிகாரமாக பதிப்பதற்காக உதவி செய்தது நம்முடைய தமிழ் ஓலைச் சுவடிகளை எல்லாம் நம்முடைய உ.வே சாமிநாத அய்யர். அவற்றையெல்லம் கண்டு பிடித்துக் கொண்டு வந்தததற்கு உறுதுணையாக இருந்தது திருவாவடுதுறை ஆதினம். தமிழுக்காக ஆதீனங்கள் செய்த தொண்டுகள் மறைக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் அரசாங்கம் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.




இன்று தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, காலத்திற்கு பழமையானது என்ற வகையில் பொருநை நாகரிகம் என்று தமிழக அரசாங்கள் கூறியுள்ளது பாராட்டுக்குரியது. அந்த நாகரிகத்தில் ஆதீனங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. தமிழ்நாடு அரசுக்கு சுவாமி நம்பிக்கை இல்லை என்பதால் ஆதீனங்கள் செய்த தமிழ் தொண்டுகளை புறக்கணிக்கக் கூடாது என்றும், தமிழ்நாடு அரசு யானைகள் புத்துணர்வு முகாமை துவங்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் வெங்கடேசன், மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.