Tanjore Temple : தஞ்சாவூர் மாவட்டத்தில் தென்பகுதியில் உள்ள கோட்டைத் தெருவில் அமைந்துள்ளது அகத்தீஸ்வரர் கோயில். இக்கோயிலின் சிறப்பை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.


தஞ்சாவூர் மாவட்டம் உள்ள அகத்தீஸ்வரர் கோயில் மனக்கவலையை தீர்க்கும் கோயிலா? அது எங்கப்பா இருக்கு என்று கேட்டு வந்து பார்த்து தங்களின் குறை தீர்ந்து செல்கின்றனர் பொதுமக்கள். அட அப்படிப்பட்ட இடம் எங்கப்பா இருக்கு. தகவலை சொல்லுங்கப்பா என்கிறீர்களா? இதோ உங்களுக்காக.


இன்றைய வெகுவேகமான நவீன உலகில் பெரும்பாலானவர்கள் மனக்கவலை எனும் மாயவலையில் சிக்கித் தவிக்கின்றனர். அது மாயவலைதான். ஆனால் இரும்பு திரை போல கண்ணை மறைத்து மனக்கவலையை ஏற்படுத்துகிறது. சரி இதுக்கு என்ன தீர்வு. துன்பம் நீங்கி, தூய மன ஓட்டத்தை ஏற்படுத்தி மனக்கவலைகளை தீர்த்து வைக்கும் வல்லமை கொண்டவராக கோனூர் நாடு அகத்தீஸ்வரர் விளங்குகிறார் என்பதுதான் அந்த சிறப்பு.


அகத்தீஸ்வர் கோயில்


இந்த இடம் எங்கிருக்கு, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ளது கோனூர் நாடு. இங்குதான் கவலைகளை தீர்க்கும் அகத்தீஸ்வர் உள்ளார். கோயிலில் இறைவன் அகத்தீஸ்வரர், சதுர வடிவ ஆவுடையார் அமைப்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது தனி சிறப்பு. சித்தர்கள் வழிபட்ட கோவில்களில்தான் இத்தகைய அமைப்பில் சிவன் காட்சி அளித்ததாக வரலாறு உள்ளது. இறைவன் கிழக்கு நோக்கி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இறைவி பெரிய நாயகி தெற்கு நோக்கியும் காட்சி அளிக்கிறார்.


இங்கு பெரியநாயகி உடனாகிய அகத்தீஸ்வரராக இறைவன் இருக்கிறார். இதன் காரணமாக பெரியநாயகி பெண்களின் மன உறுதியை மேம்பட செய்யும் தனி பண்பை தன்னகத்தை கொண்டுள்ளாள். தனது சன்னதி முன்பு மனசுமையோடு வந்து கண்ணீர் மல்க வேண்டும் பெண் பக்தர்களின் கவலை போக்கும் தாய் உள்ளத்தோடு பெரியநாயகி வீற்றிருந்து அருள்புரிகிறாள்.


சிறப்பம்சங்கள்


18 கிராம மக்கள் மட்டுமே இக்கோவிலில் வழிபட்டுவந்த நிலையில் தற்போது இக்கோயிலின் பெருமை அறிந்து முக்கியமாக மனக்கவலைகள் தீர்ப்பதை உணர்ந்து வெளி ஊர்கள், வெளி மாவட்டங்களில் இருந்தும் பலர் இக்கோயிலில் வழிபட்டு வருகின்றனர்.


திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 21 பிரதோஷ நாட்களில் தொடர்ச்சியாக வந்து நந்தியம்பெருமான், ஈசன், அம்பாளை வழிபாட்டால் திருமணயோகம் கிட்டும், குழந்தை செல்வம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமின்றி ஈசன், அம்பாள், நந்தியம்பெருமானை ஒரே இடத்தில் நின்று வழிபடும் வகையில் சன்னதி அமைய பெற்றுள்ளது இக்கோவிலின் மேலும் ஒரு தனிசிறப்பு.


சிவபெருமானின் கண்ணீரே ருத்ராட்சத்தின் தோற்றம் என சிவபுராணம் சொல்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த 5 ஆயிரம் ருத்ராட்சங்களால் அகத்தீஸ்வரர் கோவிலில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பந்தலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிவன், பெரியநாயகி அம்பாள் சன்னதிகளில் பொருத்தப்பட்டுள்ளது.