தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையினால் 1000 ஏக்கர் சம்பா நாற்றுக்கள் அழுகும் அபாயம் - துார்வாரும் பணியின் போது இருந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்- வாய்க்காலை துார் வாராததால் விவசாயிகள் வேதனை
தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டாவது போகமான சம்பா மற்றும் ஒரு போகமான தாளடி சாகுபடி நடவுப்பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு சம்பா-தாளடிக்கு 13.5 லட்சம் ஏக்கர் வேளாண்மைத்துறையினர் இலக்கு நிர்ணயித்துள்ளனர். தற்போது 50 சதவீத நடவுப்பணிகள் நடைபெற்று வருகின்றது. கடந்த காலங்களில் சம்பா, தாளடிக்கு போதுமான தண்ணீர் இல்லாததால், மின்மோட்டாரை கொண்டு நடவு பணியை செய்து வருகின்றனர். ஆனால் தற்போது, ஆறுகளில் தண்ணீர் வருவதால், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான விவசாயிகள், வாய்க்கால் தண்ணீரை கொண்டும், மின்மோட்டார் தண்ணீரை கொண்டு சம்பா தாளடி நடவுப்பணியை தொடங்கியுள்ளனர். சம்பா-தாளடி நடவுப்பணிக்காக கடந்த மாதம் வயலை உழுது, சமம்படுத்தி, விதை தெளித்தனர். பின்னர் 30 நாட்களுக்கு பிறகு, நாற்றுக்களை பறித்து, வயலில் நடவு செய்து வருகின்றனர்
தஞ்சாவூர் மாவட்டம், அன்னப்பன்பேட்டை, நரியனுார், கோணியக்குறிச்சி, மெலட்டூர், திட்டை, திருக்கருகாவூர், பட்டீஸ்வரம், சோழன்மாளிகை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமப்பகுதிகளில் பின்பட்ட குறுவை அறுவடைபணி முடிந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு, சம்பா-தாளடி சாகுபடிக்காக விதை தெளித்து, நாற்றுகளை பறித்து நடவு செய்தனர் இந்நிலையில், கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் நிலையில் இரவு, சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் பலத்த மழை பெய்ததால், சம்பா, தாளடி நடவு செய்யப்பட்ட வயல்களில் மழை நீர் சூழ்ந்து தேங்கியுள்ளது. வயலில் தேங்கிய நீரை வடிவதற்கு, வாய்க்கால்களில் துார் வாரராததால், மழை நீர் வடியாததால், நடவு செய்த நாற்றுக்கள் அனைத்தும் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பலத்த மழையினால் 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1000 ஏக்கருக்கு மேல், நடவு செய்த நாற்றுக்கள் முழ்கி, அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாய் கால்களையும் துார் வாரப்பட்டதா என்றும் துார் வாரவில்லை என்றால், போர்கால அடிப்படையில் துார் வார வேண்டும், தவறும் பட்சத்தில் வடகிழக்கு பருவ மழையினால், சம்பா, தாளடி சாகுபடி கேள்வி குறியாகும் என்றார். இது குறித்து விவசாய ராஜ்குமார் கூறுகையில், அன்னப்பன்பேட்டை, மெலட்டூர் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா-தாளடி நடவுப்பணி நடைபெற்று வருகின்றது. ஆறுகளில் தண்ணீர் வந்தாலும், வாய்க்காலில் தண்ணீர் வராததால், மின்மோட்டாரை கொண்டு நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக, நடவு செய்த வயல்களில் மழை நீர் தேங்கி நாற்றுக்கள் முழ்கியுள்ளது. நடவு செய்த சில நாட்களே உள்ள நிலையில், மழை நீர் தேங்கினால், இளம் நாற்றுகளின் துார் பிடிக்காமல், சாய்ந்தும், அழுகும் நிலை ஏற்படும்.
இப்பகுதிக்கு வெட்டாற்றிலிருந்து மெலட்டூர் வாய்கால்களாக பிரிந்து, சேட்டு வாய்க்காலில் வரும் தண்ணீர் பாசனத்திற்காகவும், வடிகாலாகவும் பயன்பெற்று வந்தது. ஆனால் ஆட்சியாளர்கள், ஆளும் கட்சியினர், வாய்க்கால்களை துார் வாருகின்றேன் என்று முழுமையாக துார் வாராமல், கடமைக்காக செய்து விட்டு சென்று விட்டனர். இதனால் வாய்க்கால்கள் முழுவதும், கோரைகள், செடி, கொடிகள் மண்டி தண்ணீர் செல்ல முடியாமல், வயலில் தேங்கிய தண்ணீர் வடிய முடியாமல் வயலிலேயே நிற்கின்றது. இதே போல் நரியனுார் மற்றும் பல்வேறு கிராமத்தில் வாய் கால்களை தூர்த்து வயலாக்கியுள்ளனர். இது குறித்து அதிகாரிகளிடம் புகாரளித்தால், கண்டு கொள்ளாமல் சென்று விடுகிறார்கள். நடவு செய்த சில நாட்கள் ஆனதால், நாற்றுக்களை காப்பாற்ற, விவசாயிகளான நாங்களே, கூலி தொழிலாளர்களை கொண்டு, வாய்க்கால்களில் உள்ள செடி, கொடிகளை அகற்றி வருகின்றோம். ஒரு ஏக்கர் சுமார் 20 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில், அனைத்து நாற்றுக்களும் அழுகி நாசமானால், விவசாயிகளுக்க இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் விவசாயிகள், வட்டிக்கும், கடன் வாங்கியும், நகைகளை அடமானம் வைத்தும், விவசாய செய்துள்ள நிலையில், நடவு செய்யப்பட்ட நாற்றுக்கள் அழுகினால், விவசாயிகளின் நிலை கேள்வி குறியாகும். எனவே, மாவட்ட நிர்வாகம், உடனடியாக வாய்க்கால்களில் துார்வாரும் பணி முறையாக நடைபெற்றதா என்பதை ஆய்வு செய்து, தவறும் நடத்திருக்கும் பட்சத்தில், துார்வாரும் பணியின் போது இருந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.