நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் கோடி கணக்கான மக்கள் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசி ஒன்றே தீர்வு என மத்திய மாநில அரசு முழுவீச்சில் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரம் காட்டி கோவாக்ஸின், கோவிஷுல்டு என்ற இரண்டு தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் மூலமாக வழங்கி பொதுமக்களுக்கு செலுத்தி வருகின்றது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் மாவட்டங்கள் தோறும் சுகாதாரத்துறை சார்பில் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது தமிழ்நாட்டில் மூன்றாவது அலை பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் 18 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அரசு அதிவேகமாக தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தி வருகிறது. 




இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 4,14,991 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 1,46,937 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் மேலும் 45 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தெரிவித்தார். இது குறித்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 9,81,082 மொத்த மக்கள் தொகையில் 18 வயதிற்கு மேற்பட்டோர் 7,61,320 நபர்கள் உள்ளனர். இதில் முதல் தவணை தடுப்பூசி 4,14,991 நபர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி 1,46,937 நபர்களும் செலுத்திக் கொண்டுள்ளனர். 




Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


இந்த சூழலில் நாளை ஞாயிற்றுக்கிழமை 506 இடங்களில் நடைபெறவுள்ள மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் 45 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும், மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 4 மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, அதன்மூலம் 1,27,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் ஊராட்சிகளில் 420 இடங்களிலும், பேரூராட்சிகளில் 15 இடங்களிலும், நகராட்சிகளில் 19 இடங்களிலும், 31 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 6 அரசு மருத்துவமனைகளிலும், 15 நடமாடும் கொரோனா வைரஸ் தடுப்பூசி குழுக்கள் என மொத்தம் 506 கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது. இதனை மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.