தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயில் கட்டுமான அமைப்பானது, இலகு பிணைப்பு என்ற முறையில் உருவாக்கப்பட்டதாகும். சிம்பிளாக சொல்லணும்னா... நம்ம கயிற்று கட்டிலை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


பெரிய கோயில் கட்டுமானத்தின்போது, ஒவ்வொரு கல்லையும் பிணைக்கும்போது, ஒரு நூலளவு இடைவெளி விட்டு விட்டு பிணைத்துள்ளனர். அதாவது, இன்றைக்கும் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் பெரியவர்கள் கயிற்றுக் கட்டிலை பயன்படுத்துவதை அனைவரும் அறிவார்கள். அந்த கயிற்றுக் கட்டில் முறையைத் தான் பெரியகோயில் கட்டுமானத்திற்கும் பயன்படுத்தி உள்ளார்கள் என்பதுதான் ஆச்சரியம். அதில்தான் நம் முன்னோர்களின் கட்டுமான திறமை அடங்கி உள்ளது.


பெரிய கோயில் என்று தஞ்சை தரணி மக்களாலும் உலக தமிழர்களாலும் பெருமிதத்துடன் அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோயில் கி.பி 1006ஆம் ஆண்டில் மாமன்னன் ராஜராஜசோழனின் ஆட்சியில் கட்டப்பட்டு, இன்றைக்கும் தமிழனின் கலை, அறிவியல் மற்றும் கட்டடக்கலைக்கு சான்றாக வலுவான, அசைக்க முடியாத உறுதியோடு உள்ளது.


யுனெஸ்கோவின் பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டு சின்னமாகவும் அரிய பொக்கிஷமாகவும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது தஞ்சை பெரிய கோயில். அதெல்லாம் சரிதான்... இந்த பெரிய கோயிலில் கட்டுமானம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.


இக்கோயில் வெளிநாட்டவர்களை கவர்ந்திழுப்பதற்கு முக்கிய காரணம் அதன் கட்டுமானம் தான். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும், ஆராய்ச்சியாளர்களையும் இந்த அளவுக்கு கவர்ந்திழுப்பதற்கு காரணமே அதன் அற்புதமான கட்டமைப்புதான். பெரியகோயிலை ஆராய்ச்சி செய்யும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள், இன்றைய அதி நவீன உத்திகளையும் விஞ்ஞானத்தின் துணையோடும், என்ன தான் தலைகீழாக நின்று அக்குவேறு ஆணிவேராக ஆராய்ச்சி செய்து பார்த்தாலும் கட்டுமான ரகசியம் பிடிபடமாட்டேன்கிறதே என்றுதான் கூறுகின்றனர். இருந்தாலும் அவர்களாகவே ஒரு அனுமானத்திற்கு வந்து இப்படி கட்டியிருப்பார்கள், அல்லது அப்படி கட்டியிருப்பார்கள் என்று தீர்மானத்திற்கு வந்துவிடுகிறார்கள்.


கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணையைப் பற்றிய முழுமையான ரகசியம் எப்படி பிடிபடவில்லையோ, அதே போல் தான் பெரிய கோயிலின் கட்டுமான ரகசியமும் இன்னமும் யாருக்கும் விளங்கவில்லை என்பது தான் உண்மையிலும் உண்மை. இங்குதான் நம் முன்னோர்களின் கட்டுமானத் திறமை அடங்கியுள்ளது. இக்கோயில் கட்டப்பட்ட விதமும், அதற்கு பயன்படுத்தப்பட்ட தூய்மையான கிரானைட் கற்களும் தான். 20ம் நூற்றாண்டில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது கிரானைட் கற்கள் என்பது என்று அனைரும் நினைத்து கொண்டிருக்கையில், சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பே கிரானைட் கற்கள் கொண்டு பெரிய கோயிலை கட்டியுள்ளனர் என்பதும் ஆச்சரியம் தானே.


மற்றொரு ஆச்சர்யம், கோயிலின் கருவறை மேல் உள்ள விமானம். இதன் மொத்த எடையானது 80 டன். பிரமாந்திரக்கல் என்றழைக்கப்படும் ஸ்தூபிக் கல் முழுக்க ஒரே கல்லால் உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அது மட்டுமல்ல, இந்த விமானத்தை தாங்கும் சதுர வடிவிலான அடிக்கல்லும் கூட 80 டன் எடை கொண்டது. அதோடு, இந்த சதுர வடிவிலான கல்லின் நான்கு புறத்திலும் இரண்டு லிங்கங்கள் என 8 லிங்கங்கள் உள்ளன. ஒவ்வொரு லிங்கத்தின் எடையும் தலா 10 டன்கள் என இதன் மொத்த எடையும் 80 டன்களாகும். வாழ்க்கையின் தத்துவமே எட்டு எட்டாக பிரிக்கப்பட்டதுதானே.




கருவறையின் மேலுள்ள விமானம், அதனைத் தாங்கும் சதுர வடிவிலான கற்கள், அதோடு சுற்றிலும் உள்ள 8 லிங்கங்கள் என இந்த மூன்றும் தான் ஒட்டு மொத்த கோயிலையும் தாங்கும் அஸ்திவாரமாக இருக்கின்றது என்பது தான் ஆச்சரியத்தின் உச்சமாகும். என்னது அஸ்திவாரம் மேல இருக்கா என்று நினைக்காதீர்கள். ஆனால் அதுதான் உண்மை என்கின்றனர் நிபுணர்கள். பொதுவாக அஸ்திவாரம் என்பது ஒரு கட்டிடத்தின் பாரத்தை தாங்கும் ஆதார சக்தியாகும். கட்டிடம் எந்த அளவுக்கு உயரமாக கட்டப்படுகிறதோ, அந்த அளவுக்கு அதன் அஸ்திவாரமும் ஆழமாகவும், வலுவாகவும் இருக்கவேண்டும் என்பது கட்டுமான விதியாகும். இல்லாவிட்டால் பில்டிங் ஸ்டார்ங்கு... பேஸ்மட்டம் வீக்கு என்ன கதையாகி விடும். கட்டுமானம் ஆட்டம் கண்டுவிடும்.


ஒரு வீட்டையோ அலுவலகத்தையோ கட்டணும்னா நிலத்தின் தன்மைக்கு ஏற்ப, குறைந்த பட்சம் 5 அடியாவது அமைக்க வேண்டும். அப்படின்னா 216 அடி உயரத்துடனும், முழுக்க முழுக்க அதிக எடைகொண்ட கிரானைட் கற்களைக்கொண்டு கட்டப்பட்ட பெரிய கோவிலுக்கு எந்த அளவுக்கு அஸ்திவாரம் அமைத்திருக்க வேண்டும். கணக்கு போட்டுமலைத்து போக வேண்டாம். இன்றைய கட்டுமான வல்லுநர்களை கேட்டால் தோராயமாக 50 அடி ஆழத்திலும், 50 அடி அகலத்திலும் போட்டால் போதும் என்று சொல்வார்கள்.


அவ்வளவு எல்லாம் இல்லை. 50 அடி ஆழத்திற்கு குழி தோண்டினால் தண்ணீர் தான் வந்திருக்கும். இல்லைன்னா புழுதி மண்டலமாக இருக்கும். இவ்வளவு பெரிய பிரமாண்டமான பெரிய கோயிலுக்கு தோண்டப்பட்ட அஸ்திவாரம் வெறும் 5 அடி ஆழம் தான். நாங்க நம்ப மாட்டோமே என்று சொன்னாலும் அதுதான் உண்மை. முக்கியமாக அதுதான் அறிவியல் உண்மையாகும். அங்கு தான் இருக்கு நம் தமிழரின் அறிவியல் திறமை.


பெரிய கோவில் கட்டுமான அமைப்பானது, இலகு பிணைப்பு என்ற முறையில் உருவாக்கப்பட்டதாகும். அதாவது, இக்கோயுலின் கட்டுமானத்தின் போது, ஒவ்வொரு கல்லையும் பிணைக்கும் போது, ஒரு நூலளவு இடைவெளி விட்டு விட்டு பிணைத்துள்ளனர். அதாவது கயிற்றுக் கட்டில் முறையைத் தான் பெரியகோவில் கட்டுமானத்திற்கும் பயன்படுத்தி உள்ளார்கள் என்பதுதான் அந்த  ஆச்சரியம்.


கயிற்றுக் கட்டிலில் கயிறு பார்ப்பதற்கு ரொம்ப இலகுவானதாக இருக்கும். ஆனால் அந்த கட்டிலில் ஆட்கள் உட்கார்ந்த உடனேயே பாரம் தாங்காமல் உள்வாங்கிக் கொண்டு, இறுக ஆரம்பிக்கும். கயிறுகளின் பிணைப்பானது வலுவாகிவிடும். அந்த டெக்னிக்தான் பெரிய கோயில் கட்டுமானத்திற்கும் பயன்படுத்தி உள்ளனர் நம் முன்னோர்கள்.  கோவிலின் கட்டுமானத்தில் அடியிலிருந்து கற்களை ஒவ்வொன்றாக நூலளவு இடைவெளி விட்டு மிகவும் இலகுவாக அடுக்கும்போது, கற்கள் பாரம் தாங்காமல் இறுக ஆரம்பித்து விடும்.


முழு கட்டுமானத்தையும் முடித்து கருவறை உச்சியில், மிகப்பிரமாண்டமான 80 டன் எடைகொண்ட, சதுர வடிவ கல், நந்தி, விமானம் என 240 டன் எடையை அழுந்தச் செய்வதன் மூலமாக பெரிய கோவிலின் ஒட்டுமொத்த கட்டுமானமும் பலம் பெற்றுவிடும். இப்படித்தான் பெரிய கோயிலின் அஸ்திவாரத்தை ஒட்டுமொத்தமாக கருவறை உச்சியில் வைத்துள்ளனர் நம் முன்னோர்கள். இது வரையிலும் எத்தனையோ பூமி அதிர்ச்சி, நில நடுக்கம் என உருவாகி அசைக்க முயன்றாலும் கூட அவை அத்தனையும் பெரிய கோயில் கட்டுமானத்தின் முன்பு முடியாதுப்பா... எங்களால் முடியாதுப்பா என்று தோற்று மண்டியிட்டு வணங்கி சென்றது தான் மிச்சம்.