தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுக்கா, மருதாநல்லுார் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சாலை, தெருக்கள் ஒரமாக பல ஆண்டுகள் பழமையான புளிய, மா, வேப்ப, துாங்குமுஞ்சி உள்ளிட்ட பல்வேறு மரங்கள் உள்ளன. இம்மரங்களை மருதாநல்லுார் ஊராட்சி நிர்வாகம் பராமரித்து வருகின்றனர்.  மேலும், இப்பகுதியில் நூற்றுகணக்கான மரங்கள் 10 ஏக்கர் பரப்பளவில் வளர்ந்திருக்கின்றன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குடியிறுப்பு பகுதிகள் அனுமதியின்றி நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த மா, வேம்பு, வேங்கை

  உள்ளிட்ட  மரங்களை வெட்டி கடத்தி சென்றுள்ளனர். இதனை அறிந்த குடியிறுப்பு வாசிகள் உடனடியாக மருந்தாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ரவி மற்றும் ஊராட்சி செயலர் சந்திரநாத் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் மரங்களை யார் வெட்டியது என தெரியவில்லை. வெட்டிப்பட்ட மரங்களின் மதிப்பு  1 லட்சம்  இருக்கும்  என அங்குள்ள குடியிறுப்பு வாசிகள் தெரிவித்தனர். இது குறித்து மருதாநல்லுார் பொது மக்கள் கூறுகையில்,கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையினால் பெரும்பாலான மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. மேலும் கிளைகள் விழுந்ததால், பெரும் பாலான மின்சாரம் செல்லும் கம்பிகள், மின் கம்பங்கள் கீழே விழுந்தன. இதனை சீர் செய்ய வேண்டும் என்பதற்காக, சாலையோரத்தில் உள்ள மரக்கிளைகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெட்டப்பட்டது. இந்நிலையில், வெட்டப்பட்ட மரங்களையும், மேலும் சாலையின் ஒரத்திலிருந்த மரக்கிளைகளையும், மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் கடத்தி சென்று விட்டார்கள்.




கடந்த சில வருடங்களுக்கு முன்பு மருதாநல்லுார் முழுவதும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இதனால் மருதாநல்லுார் முழுவதும் பல்வேறு மரங்களால் சோலை வனமாகியது.  மேலும், குடியிருப்பு பகுதிகளில் உள்ளவர்கள் பெரும்பாலானோர், முதியவர்களும், ஒய்வு பெற்றோர்களும், வேலைக்கு செல்பவர்கள் இருப்பதால், அவர்கள் வெளியில் அதிகமாக வரமாட்டார்கள். இதனை பயன்படுத்தி கொண்டு, மர்ம நபர்கள், வளர்ந்துள்ள மரங்களை வெட்டி எடுத்து சென்று விட்டார்கள்.  இது குறித்த புகார் அளித்தால், மர்ம நபர்களால் பிரச்சனை வரும் என்பதால், குடியிருப்பு வாசிகள், புகாரளிக்காமல் இருந்து விடுவார்கள்.  இது போன்ற செயல்கள் அடிக்கடி நடைபெற்று வருவது வழக்கம்.




தமிழக அரசு பனை மரம் உள்ளிட்ட எந்தவிதமான மரங்களை வெட்டக்கூடாது என்று உத்தரவு இருந்தும், மரங்களையும், மரக்கிளைகளை வெட்டி செல்வது என்பது வேதனைக்குரிய செயலாகும்.  இப்போது, 1 லட்சம் மதிப்புள்ள மரங்கள் வெட்டப்பட்டுள்ளதை, கடத்தியுள்ளதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மருதாநல்லுார் கிராமத்தில் வெட்டப்பட்ட மரக் கிளைகளையும், மரங்களையும் வெட்டி கடத்தி சென்ற மர்ம நபர்களை பிடித்து, அவர்களை இது போன்ற பல்வேறு மரங்களை வைத்து பாதுகாத்து, வளர்க்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என்றனர்.