தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டம் நடைபெற்றது. கோட்டாட்சியர் மு. ரஞ்சித் தலைமையிலும், துணை ஆட்சியர் (பயிற்சி) ஜஸ்வந்த் கண்ணன் முன்னிலையிலும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயி தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ் பேசுகையில், குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையிலுள்ள மின்மாற்றி பழுதாகிவிட்டது. இதைச் சீரமைக்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால், கரும்பு அரைவைப் பணி தொடங்குவது தாமதமாகும் சூழ்நிலை உள்ளது. இதை உடனடியாகச் சீரமைக்க நடவடிக்கை வேண்டும் என்றார்.
விவசாயி ராயமுண்டான்பட்டி என்.வி. கண்ணன் பேசுகையில், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து அரசு முறையாகக் கணக்கெடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30,000 நிவாரணம் அறிவிக்க வேண்டும். கடந்த ஆண்டு காப்பீடுக்கான இழப்பீட்டுத் தொகை இன்னும் நிறைய பேருக்குக் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். விவசாயி அம்மையகரம் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர் பேசுகையில், அம்மையகரம் கிராமத்தில் நடவு செய்து சில நாள்களே ஆன நெற் பயிர்கள் நீரில் மூழ்கின. ஒவ்வொருவரும் ஏக்கருக்கு 12,000 முதல் 14,000 வரை செலவு செய்துள்ளோம். எனவே, ஏக்கருக்கு ரூ. 10,000 நிவாரணம் வழங்க வேண்டும். நீரில் மூழ்கிய பயிர்களைக் காப்பாற்ற தெளிக்க வேண்டிய ஜிங் சல்பேட் எங்குமே கிடைக்கவில்லை. இதை விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
விவசாயி திருவோணம் வி.கே. சின்னதுரை பேசுகையில், திருவோணம் பகுதியில் கார்த்திகை பட்டத்தில் நிலக்கடலை பயிரிடுவது வழக்கம். ஆனால், விதை கிடைக்கவில்லை. கடந்த ஆண்டுகளில் கார்த்திகை பட்டத்துக்கு மார்கழியில்தான் விதை வழங்கப்பட்டது. அதனால், எந்தப் பயனும் இல்லை. எனவே, உடனடியாக விதை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். யூரியா தட்டுப்பாடு அதிகமாக இருக்கிறது. எனவே, யூரியா, ஜிங் சல்பேட், டிஏபி உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் சின்னதுரை. முன்னதாக, 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் அறிவித்ததையொட்டி, விவசாயிகள் இனிப்புகள் வழங்கினர். மேலும், ஆம்பலாப்பட்டு அ. தங்கவேல் கூறியதன் அடிப்படையில், இப்போராட்டத்தில் பங்கேற்று உயிர் தியாகம் செய்த 600 க்கும் அதிகமான விவசாயிகளுக்கு ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, கோட்டாட்சியர் ரஞ்சித் பேசுகையில், இக்கூட்டத்தில் விவசாயிகள் முன் வைத்த கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க வேண்டிய பல்வேறு துறைகளின் உயர் அலுவலர்கள் கலந்து கொள்ளவில்லை. சில துறைகளில் உயர் அலுவலர்கள் பங்கேற்காமல் இளநிலை அலுவலர்கள் மட்டுமே பங்கேற்றனர். இதனால், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அடுத்த முறை அனைத்து துறைகளிலும் உயர் அலுவலர்கள் கண்டிப்பாகப் பங்கேற்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஆட்சியரிடம் புகார் செய்யப்படும் என எச்சரிக்கை செய்தார்.