தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ம் அம்மாபேட்டை அருகே தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்தது. இந்த பகுதியில் பள்ளம் இருப்பதை அறிவிக்கும் போர்டு ஏதும் இல்லை. மேலும் தடுப்பு கம்பிகளும் இல்லாததால் அடிக்கடி இப்பகுதியில் விபத்துக்கள் ஏற்படுகிறது என்று பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.


தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை புதிய பேருந்து நிலையம் அருகே ஹவில்தார்சத்திரம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் பள்ளத்தில் விழுந்தது. அம்மாபேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலை சார்பாக சாலை போடப்பட்டு முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளது. இந்த சாலையானது ஹவில்தார்சத்திரத்தில் இருந்து உடையார் கோவில் சாலையை இணைக்கும் வழியாகும்.


இந்த சாலை முழுவதுமாக முடிக்கப்படாமல் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்த சாலையானது நீடாமங்கலம், கொரடாச்சேரி, திருவாரூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம், தஞ்சாவூர், திருச்சி செல்லும் முக்கிய சாலையாகும். இதில் தினமும் ஆயிரக்கணக்கில் பேருந்துகள், லாரிகள், பைக்குகள், ஆட்டோ, சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும் பகுதியாக உள்ளது.




இந்த பகுதியில் இரும்பு தடுப்பு வேலி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த இரும்பு தடுப்பு வேலி இல்லாததால் பள்ளம் இருப்பது தெரியாமல் வெளியூரிலிருந்து வருபவர்கள் நிலை தடுமாறுகின்றனர். இதேபோல் சில நாட்களுக்கு பின் முன்பு அந்த பகுதியில் பைக் விபத்து அடிக்கடி நடைபெற்றது.


பின்பு தேசிய நெடுஞ்சாலை மற்றும் அம்மாபேட்டை காவல் துறையினர் சார்பில் அந்த பகுதியில் மண் நிரப்பப்பட்டு இரும்பு தடுப்பு வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த இரும்பு தடுப்பு தற்போது அந்த பகுதியில் இல்லை. இதனால் அந்த வழியே வந்த கார் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. இருப்பினும் அந்த சாலையில் இரும்பு தடுப்பு வேலி அமைத்து விபத்துகளை தடுக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், ”அதிகளவு வாகன போக்குவரத்து இருக்கும் இந்த சாலையில் இரும்பு தடுப்பு வேலி அமைக்க வேண்டும். பகல் நேரத்திலேயே இதுபோன்று விபத்துக்கள் ஏற்படுகிறது. இரவு நேரத்தில் சொல்லவே வேண்டாம். வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு பள்ளம் இருப்பது தெரிய வாய்ப்பில்லை. இதனால் குடும்பத்துடன் வருபவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். உயிர் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள இந்த பகுதியில் இரும்பு தடுப்பு வேலி அமைப்பதுதான் மிகவும் சிறந்த ஒன்றாகும். எனவே இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.