சமூக பொறுப்புணர்வும் கற்பிக்கப்படுகிறது


தஞ்சாவூர் மானோஜிப்பட்டியில் இயங்கி வருகிறது அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி. இங்கு பயிலும் மாணவர்களுக்கு கல்வியுடன் சேர்த்து பல்வேறு சமூக பொறுப்புணர்வுகளும் கற்பிக்கப்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவர்கள் விளையாட்டு, பாட்டு, நடனம், பேச்சுப்போட்டி என மாவட்ட அளவில் பல்வேறு பரிசுகளை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.


மாணவர்களின் ஆர்வ சிந்தனையை தூண்டுகின்றனர்


அதுமட்டுமா? மாணவர்களின் ஆர்வ சிந்தனையை தூண்டி, முயற்சி எனும் விதைகளை தூவி உழைப்பு என்னும் தண்ணீரை பாய்ச்சி வெற்றி எனும் பயிரை அறுவடை செய்பவரே சாதனையாளர்கள் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்துகின்றனர். வெற்றிக்கிடைக்கும் வரை விதைத்துக்கொண்டே இருக்க வேண்டும். முயற்சி என்ற வறண்டு போகாத தண்ணீரை தெளித்து கொண்டே இருக்க வேண்டும். வேர்கள் என்ற ஒன்று தான் வளரும் செடிக்கு ஆதாரம். தன்னம்பிக்கை தான் உன் வாழ்க்கையின் உயர்வுக்கு படிக்கட்டுகள். நம்பிக்கை எனும் சாம்ராஜியத்தை உனக்குள் உருவாக்கினால் நாளை வெற்றியாளர்கள் நீங்கள்தான்.


சிலம்ப கலையில் முதலிடம் பெற்ற மாணவர்கள்


முடியும் என முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டால் உயர்ந்த சிகரத்திற்கும் உங்களை கண்டு அச்சம் வரும். முடியாத கலைகள் கூட முயற்சி என்ற வேட்டையில் மண்டியிட்டு நிற்கும். நம்முடைய பாரம்பர்ய அறிவையும், விளையாட்டுகளையும் அடுத்த தலைமுறைக்காகவாவது நாம் மீட்க வேண்டிய தேவை அதிகமாகவே உள்ளது. அதில் ஒன்றுதான் சிலம்பம். சிலம்ப கலையில் தஞ்சை மானோஜிப்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பல்வேறு வெற்றிகளையும், விருதுகளையும், பரிசு கோப்பைகளையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்த மாணவர்


இப்படி தனிச்சிறப்புகளால் உயர்ந்து கொண்டே இருக்கும் இப்பள்ளி மாணவர்களுக்காக மும்பை ப்ளூ சிப் நிறுவனத்தினர் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து 2 வகுப்பறை கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தனர். இந்த வகுப்பறை கட்டடங்கள் தற்போது கட்டி முடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வகுப்பறை கட்டடங்களை பள்ளியின் சாரண மாணவர் நாகேஸ்வரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சாரணிய மாணவிகள் குத்துவிளக்கேற்றினர். 




விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரமௌலி, சென்னை ஐஐடி கணித பேராசிரியர் முரளி கிருஷ்ணன், தெற்கு ரயில்வே பொறியாளர் ரவிக்குமார், சென்னை ஐஐடி கியூப் நிறுவனத்தைச் சேர்ந்த ஜான், முருகதாஸ், ரவிக்குமார், மனோஜிப்பட்டி எட்வின், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் ரவிச்சந்திரன், பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் மருதம்பாள் மற்றும் கிராம மக்கள், ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.


பொதுமக்கள் வியந்து பாராட்டினர்


அட இது புதுசாக இருக்கே. அமைச்சர், எம்எல்ஏ அல்லது செலிபிரிட்டிகளை வைத்து பள்ளி வகுப்பறை கட்டிடத்தை திறக்காமல் மாணவரை வைத்தே திறக்க வைத்ததற்காக தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.