தஞ்சாவூர்: ரூ.5 ஆயிரத்துக்கும், ரூ.10 ஆயிரத்துக்கும் கொலைகள் செய்யக்கூடிய நிலை தமிழகத்தில் உருவாகி உள்ளது. இந்த சூழ்நிலையை அரசு தடுக்க வேண்டும்.. திமுக ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை. இவ்வாறு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டினார்.
ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும்
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கும்பகோணத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை புரிந்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் எனது கருத்து. திமுக ஆட்சியில் பொதுமக்கள் யாருக்கும் பாதுகாப்பு என்பதே இல்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தை தவிர மற்ற யாருக்கும் பாதுகாப்பு இல்லை.
போதைப்பொருள் கலாச்சாரத்துக்கு இளைஞர்கள் அடிமை
தமிழகம் முழுவதும் பரவியுள்ள கஞ்சா, போதை பொருள் கலாச்சாரத்துக்கு இளைஞர்கள் அடிமையாகி விட்டனர். இதனால் வேலைவாய்ப்பு இல்லாததால் இளைஞர்கள் கூலிப்படையாக மாறிவிட்டனர். இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும். தமிழகத்தில் தினமும் சாலைகளில் சராசரியாக 5 கொலைகள் நடக்கிறது. இந்த கொலை வழக்கில் கைது செய்யப்படுபவர்கள் அனைவரும் 20 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் தான். சென்னை மாநகர ஆணையரை மாற்றினால் மட்டும் மாற்றம் வராது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்பதுதான் உண்மை.
தண்ணீர் பெற முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை
ரூ.5 ஆயிரத்துக்கும், ரூ.10 ஆயிரத்துக்கும் கொலைகள் செய்யக்கூடிய நிலை தமிழகத்தில் உருவாகி உள்ளது. இந்த சூழ்நிலையை அரசு தடுக்கவேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்ய கர்நாடகா அரசு தண்ணீர் தரவில்லை. ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி நானும் டெல்டாக்காரன் என்று கூறிக்கொள்கிறார். அவர்கள் கூட்டணி கட்சி தானே காங்கிரஸ் ஆட்சிதானே கர்நாடகாவில் நடக்கிறது.
மதுவிலக்கை கொண்டு வந்தால்தான் அமைதி பூங்காவாகும்
ஆனால் கர்நாடகா தமிழகத்துக்கு தண்ணீரும் தரவில்லை. மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று தமிழ்நாட்டின் உரிமையை பறிக்க அனைத்து முயற்சியையும் செய்கின்றனர். ஆனால் தமிழகத்துக்கு தண்ணீர் பெற, முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சியிடம் பேசி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழத்தில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வந்தால் தான் தமிழ்நாடு அமைதி பூங்காவாக மாறும். பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும்.
விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. ரூ.1000, ரூ.2 ஆயிரம் என்று ஏழை எளிய மக்களிடம் கொடுத்து விலைக்கு வாங்க முயற்சிக்கின்றனர். ஜனநாயகம், பணநாயகத்தை ஜெயிக்கவேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.