தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருமண்டங்குடியிலுள்ள தனியார்சர்க்கரை ஆலைகளில் 2013-2014 முதல் 2017-2018 ஆம் ஆண்டு வரை விவசாயிகளிடமிருந்து கரும்பினை கொள்முதல் செய்து, சர்க்கரை மற்றும் உபபொருட்களை உற்பத்தி செய்து, முழுவதுமாக விற்பனை செய்த வகையில், விவசாயிகளுக்கு மட்டும் பல கோடியை வழங்காமல்,விவசாயிகளை 4 ஆண்டுகளாக அலைகழித்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதே போல், 2017 ஆம் ஆண்டு முதல் ஆலை நிறுத்தப்பட்டதால், அங்கு பணியாற்றிய 600க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்பளம் வழங்காமல் நிறுத்தி விட்டனர்.  இதனால் பணியாளர்கள் அனைவரும் கஷ்டமான சூல்நிலையில் குடும்பம் நடத்தி வருகின்றனர்.



கரும்பு விவசாயி ஒருவரிடம் மட்டும் சுமார் 25 லட்சம் வரை பணம் நிலுவையிலுள்ளது. இதே போல் சுமார் 2 ஆயிரம் கரும்பு விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் வரை பணம் வழங்காமல் நிலுவை வைத்துள்ளனர். மேலும் கார்பரேசன், எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கிகளில், கரும்பு விவசாயிகளிடம், நிலுவை தொகை வழங்குவதாக கூறி, 213 கரும்பு விவசாயிகளின் பெயரில், கரும்பு விவசாயிகளுக்கு தெரியாமல் 46,88,99,205 வரை  பணம் பெற்றுள்ளனர். வங்கி அதிகாரிகள், கரும்பு விவசாயிகளிடம் பணத்தை திருப்பு செலுத்த கூறி நெருக்கடி தருகிறார்கள். இதனால் வங்கிகளில் கடன், நகைகளை அடமானம் வைக்க முடியாமல் தவித்து வருகின்றார்கள். இது குறித்து ஆலையின் மேலாண் இயக்குனரிடம், கரும்பு விவசாயிகள், நேரிடையாக சென்று கரும்பிற்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையினை வழங்க வேண்டும் என்று கேட்டதற்கு, என்னால் முடியாது, கோர்ட்டில் பார்த்து கொள்ளுங்கள் என பதில் கூறி அனுப்பி விட்டார்.  இந்நிலையில், ஆலைக்கு சொந்தமான சுமார் 100 ஏக்கர் நிலம் உள்ளது. அதனை நிலுவைத்தொகை பெறாமல் உள்ள விவசாயிகள் கையகப்படுத்தி, விவசாயம் செய்ய முடிவு செய்துள்ளனர்.




எனவே, கரும்பு விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் நிலுவைத்தொகையினை வழங்க கோரி, 22 ஆம் தேதி ஆலையின் முன்பு அறவழிப்போராட்டம் செய்து, ஆலைக்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்த முடிவு செய்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதனன், கரும்பு விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.  அதில் பேசிய வட்டாட்சியர் மதுசூதனன், நானும் புதுசு, மாவட்ட கலெக்டரும் புதுசு, வருவாய் ஆய்வாளரும் புதுசு. எனவே, சிறிது நாட்கள் அவகாசம் கொடுத்தால், நான் விசாரித்து முடிவு சொல்கிறேன். என்றார். அதற்கு கரும்பு விவசாயிகள் ஒத்துக்கொள்ளாததால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராமல், போராட்டத்தை நடத்துங்கள் என வட்டாட்சியர் மதுசூதனன் கூறியதையடுத்து, கரும்பு விவசாயிகள், அறிவித்தபடி போராட்டம் நடைபெறும் என்று கூறி விட்டு வெளியேறினார்கள்.


இது குறித்து கரும்பு விவசாயிகள் கூறுகையில்,  ஆலை உயர்  அலுவலர்கள், நிர்வாகிகள், சில கரும்பு விவசாய பிரதிநிதிகள் மற்றும் இடைத்தரகர்கள், வங்கி உயர் அதிகாரிகள் சேர்ந்து கூட்டு சதி செய்து, அப்பாவி கரும்பு விவசாயிகள், கூலி விவசாய தொழிலாளர்களின் அறியாமையையும், ஏமாளித்தனத்தையும் ஆலை நிர்வாகம் சாதகமாக பயன்படுத்தி கொண்டு, அவர்களிடம் ஆசை வார்த்தை கூறியும், கட்டாயப்படுத்தியும், பல தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் பூர்த்தி செய்யப்படாத பல கடன் விண்ணப்பங்களிலும், வெள்ளைத்தாளிகளிலும் கையெழுத்துக்களையும், அவர்களின் ஆதார் அட்டை நகல்களையும், பல படிவங்களிலும்  பல கையெழுத்துக்களை பெற்றுள்ளனர். இதனால் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் சுமார் பல ஆயிரம் கரும்பு விவசாயிகளிடமிருந்து பல கோடிக்கு மேல் வங்கிகளின் விதிமுறைகளுக்கு புறம்பாக கடன் பெற்றுள்ளனர்.




இது போன்ற அவல நிலையடுத்து பல்வேறு போராட்டங்கள், குறை தீர் கூட்டங்களில் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்காமல், காலம் தாழ்த்தி வருகிறது. தற்போது அனைத்து கரும்பு விவசாயிகளுக்கும், வங்கி நிர்வாகம் கடன் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வருகின்றது. அந்த ஆலையில் கடந்த காலங்களில் 12.50 லட்சம் டன் கரும்பு அரைவைக்கு சென்றது. ஆனால் 2018-2019 ஆம் ஆண்டு 1.50 லட்சம் டன் கரும்பு அரவைக்கு சென்றது. வரும் காலங்களில் கரும்பு சாகுபடி முற்றிலுமாக குறைய வாய்ப்புள்ளது. தற்போது, கருப்பூர், குடிகாடு, புத்துார், மேட்டுத்தெரு, உம்பளாப்பாடி, கபிஸ்தலம், இளங்கார்குடி, பாபநாசம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சாகுபடி செய்யும் கரும்பை, அரியலுார் மாவட்டம், சாத்தமங்கலத்திலுள்ள சர்க்கரை ஆலைக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் டிரைவர் கூலி 1500, வாகன வாடகை, டீசல் செலவு, மாவட்ட எல்லையில் போலீசாருக்கு மாமுல் என கொடுத்து வருவதால், சாகுபடி செய்த செலவு வருமா என்பது கேள்வி குறியாகியுள்ளது.


வங்கிகளில் தொல்லை, ஆலையிலிருந்து பல லட்ச ரூபாய் நிலுவை தொகை வரவேண்டியிருப்பதால், கரும்பு விவசாயிகள் அனைவரும் பெரும் கடன் சுமையில் இருந்து வருகின்றோம். கரும்பு விவசாயிகள் பாதித்துள்ளது குறித்து, தமிழக அரசோ, அரசு அதிகாரிகளோ யாரும் கண்டு கொள்ளாமல் இருந்து வருவது வேதனையான விஷயமாகும். இதனை தொடர்ந்து ஆலையின் முன்பு அறவழி போராட்டம் செய்து, ஆலைக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முடிவு செய்து அறிவித்தோம். இதனையறிந்த வட்டாட்சியர், எங்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார்.ஆனால் எங்களின் பேச்சிற்கு உடன்பாடு ஏற்படாததால், நாங்கள் திட்டமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.  போராடத்தின் போது, ஆலைக்கு சொந்தமான 100 ஏக்கரில், 50க்கும் மேற்பட்ட டிராக்டர்கள், 1000 மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டு, விவசாயம் செய்ய முடிவு செய்துள்ளோம். போலீசாரோ, வருவாய்த்துறையோ யார் தடுத்தாலும், கரும்பு விவசாயிகள், அத்துமீறி, நிலத்தை கையகப்படுத்துவோம் என்றார்.