தஞ்சாவூர் பழைய நீதிமன்றச் சாலையிலுள்ள கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்த தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார்  செய்தியாளர்களிடம் பேசுகையில், தஞ்சாவூர் மாநகரில் புதிதாகக் கட்டடம் கட்டுபவர்கள் மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெற்றுதான் கட்ட வேண்டும். புதிதாக கட்டப்படும் கட்டடங்கள், வணிக நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களின் வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு வாகன நிறுத்துமிட (பார்க்கிங்) வசதி இருக்க வேண்டும். ஒவ்வொரு பொது கட்டடங்களான மருத்துவமனை, செவிலியர் விடுதி, நகை கடை, பெட்ரோ பங்க், மருந்து கடை, மகப்பேறு மருத்துவமனை, ஸ்டார் ஹோட்டல், லாட்ஜ், கல்யாண மண்டபம், சினிமா தியேட்டர், பூங்கா, கூட்டரங்கம், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட  பொது மக்கள் வந்து செல்லும் கட்டிடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்பது கட்டாயம்.




இதைக் கட்டட அனுமதி பெற வருபவர்களிடம் வலியுறுத்துகிறோம். அந்த வகையில் மாநகராட்சி எல்லைக்குள் கட்டப்படுகிற பொது கட்டடங்களுக்கு ஆண்டுதோறும் உரிமத்தை வட்டாட்சியரிடம் புதுப்பிக்க வேண்டும். அப்போது, அக்கட்டடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்கிறோம். கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டால் மாநகரில் சட்டம் ஒழுங்கு பிரச்னை வெகுவாக குறையும். எந்த ஒரு தவறு நடந்தாலும் கண்காணிப்பு கேமரா மூலம் எளிதாக கண்காணிக்கலாம். மாநகராட்சி மூலம் நோட்டீஸ் வழங்கிய பின் உடனடியாக சிசிடிவி கேமராவை பொருத்தாவிட்டால், அக்கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்படும்.


கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கடந்த காலங்களில் சிறு, சிறு குற்றச் சம்பவங்கள் கண்டறியப்பட்டு, தற்போது குறைந்துள்ளது. மாநகரப் பகுதிகளிலுள்ள பொது கட்டடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறதா  என மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்யும் பணியைத் தொடங்கியுள்ளனர். அனைத்து பொது கட்டடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்போது குற்றச் செயல் இல்லாத மாநகரமாகத் திகழும்.




கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தாதவர்களுக்கு நோட்டீசு கொடுக்கப்படும். அதன் பிறகும் அவர்கள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவில்லை என்றால், கட்டட அனுமதி ரத்து செய்யப்படும். மாநகரில் 1,000 கட்டடங்களைக் கண்டறிந்து ஆய்வு செய்து வருகிறோம், இதுவரை 376 கட்டிடங்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளோம். இதே போல் மாநகராட்சி முழுவதுமுள்ள அனைத்து தெருக்களிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இரண்டரை கோடி மதிப்பில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, அதனை மாநகராட்சி அலுவலகத்தில் கண்காணிக்கப்படும். குற்ற செயல்களில் செய்து விட்டு தப்பித்து ஒடுபவர்கள், போக்குவரத்து விதிமீறி செல்பவர்கள், குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டுபவர்கள், சாலை, தெருக்களில் பொது மக்களுக்கு இடையூர் செய்பவர்கள் உள்ளிட்டோரை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக வைக்கப்படவுள்ளது என்றார்.