கும்பகோணம் மணிக்கூண்டு பகுதியில் அமைந்துள்ள சித்தி விநாயகர் கோவிலை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க இந்து சமய அறநிலையத்துறையை வலியுறுத்தி அகில பாரத இந்து ஆன்மீக பேரவை சார்பில் கும்பகோணத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம் மகாமக  குளம் அருகே உள்ள மணிக்கூண்டு பகுதியில் சித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் இருபுறமும் ஆக்கிரமித்து பயணிகள் நிழற்குடை மற்றும் தனியார் கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கு முன்பும் ஏராளமான தரைக்கடை வியாபாரிகள் கோவிலை ஆக்கிரமித்து கடைகளை அமைத்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலுக்குள் நுழைய முடியாத வகையில் தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர். இதனால் சித்தி விநாயகர் கோவில் முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதி பட்டு வருகின்றனர். இந்த சித்தி விநாயகர் கோவிலை சுற்றி ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அகில பாரத இந்து ஆன்மீக பேரவை சார்பில் இந்து சமய அறநிலையத்துறை கும்பகோணம் உதவி ஆணையர் அலுவலகம் முன்பு நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அகில பாரத இந்து ஆன்மிக பேரவை மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார்.




மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவசேனா மாவட்ட பொது செயலாளர் குட்டி சிவகுமார் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் அகில பாரத இந்து ஆன்மீக பேரவை மாநிலத் தலைவர் துரை. திருவேங்கடம், சிவசேனா மாநில துணைத் தலைவர் போஸ், முதன்மை செயலாளர் சுந்தரவடிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். இதில் அகில பாரத இந்து ஆன்மீக பேரவை மாநில செயலாளர் சுப்பராயன், வக்கீல்கள் பிரிவு வெங்கடேஷ் பாபு, சிவசேனா மாவட்ட தலைவர் ரவி, இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் குருமூர்த்தி, மாவட்ட அமைப்பாளர் ரவிச்சந்திரன் நகர தலைவர் பிரபாகரன் செயலாளர் கணேஷ் துணைத் தலைவர் முருகன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.




அகில பாரத இந்து ஆன்மிக பேரவை மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் கண்ணன் கூறுகையில்,கும்பகோணம் மணிக்கூண்டு அருகில் உள்ள சித்தி விநாயகர் கோயில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். இக்கோயிலை சுற்றிலும் வணிக நிறுவனங்கள், தரைகடைகள் ஆக்கிரமிக்கப்பட்டதால், கோயில் இருப்பது தெரியாமல் உள்ளது. இதனால் அக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், இந்து சமய அறநிலையத்துறையினருக்கும் பல முறை புகார் அளித்தும் கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றனர். எனவே, உடனடியாக சித்தி விநாயகர் கோயிலை சுற்றிலுள்ள ஆக்கிமிப்புகளை அகற்ற வேண்டும், தவறும் பட்சத்தில் அறநிலையத்துறையை கண்டித்தும், ஆக்கிரமிப்புகளை அகற்றும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டம் செய்யப்படும் என்றார்.