தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் "உங்களைத்தேடி உங்கள் ஊரில்" சிறப்புத் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும் கிராம சேவை மைய செயல்பாடுகள், கிராம நிர்வாக அலுவலகம், தற்காலிக நேரடி கொள்முதல் நிலையம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.


தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது.


தற்காலிக நேரடி கொள்முதல் நிலையத்தில் ஆய்வு


தமிழ்நாடு முதலமைச்சர்  மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு. உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கு வரும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் "என்ற திட்டத்தினை அறிவித்தார். அதன் அடிப்படையில் இத்திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டம். பாபநாசம் ராராமுத்திரைக்கோட்டை வட்டம் அம்மாபேட்டை ஒன்றியம், ஊராட்சியில் கிராம சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்தும், கிராம நிர்வாக அலுவலகம், தற்காலிக நேரடி கொள்முதல் நிலையம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

.


 


மாணவர் விடுதியில் வழங்கப்படும் உணவு குறித்து ஆய்வு


பின்னர் அம்மாபேட்டை ஒன்றியம் பூண்டி ஊராட்சியில் பூண்டி பிற்படுத்தப்பட்டோர் அரசினர் கல்லூரி மாணவர் விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி, உணவின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தும், அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் குறித்தும், பூண்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித் தரம் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.


கால்நடை மருந்தக செயல்பாடு குறித்து பார்வை


தொடர்ந்து, சாலியமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கோப்புகளை சரிபார்த்து, உயர்நிலை நீர்த்தேக்க தொட்டியை பார்வையிட்டு, சாலியமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் கல்வித் திறனை ஆய்வு செய்தார். மாணவர்களை நன்கு படிக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், சாலியமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கோப்புகளை பார்வையிட்டு, சாலியமங்கலம் ஊராட்சியில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உரக்கிடங்கில் உரங்களின் இருப்பு குறித்தும், சாலியமங்கலம் ஊராட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாய விலைக் கடையில் உணவுப் பொருட்களின் அளவு மற்றும் தரம் குறித்தும், சாலியமங்கலம் அரசினர் கால்நடை மருந்தகத்தின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து விசாரித்தார்


பின்னர் அம்மாபேட்டை தேர்வு நிலை பேரூராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களிடம் சிகிச்சை நல்ல முறையில் அளிக்கப்படுகிறதா என்பதையும், மருந்துகள் இருப்பு, மருத்துவர் பணியாளர் வருகைப் பதிவேடு ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, அம்மாபேட்டை தேர்வுநிலை பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மையில் தினசரி நடைபெறும் பணிகள் மற்றும் உரப்படுக்கை, உரம் தயாரிக்கும் முறை குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


17 பயனாளிகளுக்கு ரேஷன் கார்டு வழங்கல்


மேலும், பாபநாசம் வேளாண்மை விரிவாக்க மையத்தை மையத்தில் நுண்ணூட்ட உரங்கள் இருப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஏராளமான பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். தொடர்ந்து, புதிய குடும்ப அட்டை 17 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  வழங்கினார்கள்.


தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற உங்களைத்தேடி உங்கள் ஊரில் முகாமில் 13 ஆண்டுகளாக பெற்றோரை பிரிந்திருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த திரு-குஜாலா பிரசாத் என்பவர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி ஒருமாத காலம் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு பூரண மனநலம் பெற்ற பின் பெற்றோருடன் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர்  முன்னிலையில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நிகழ்ச்சியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா, மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்  பாலகணேஷ், கும்பகோணம் சார் ஆட்சியர் ஹிருத்யா எஸ்.விஜயன்,  ஒன்றியக்குழுத் தலைவர்கள்  சுமதி கண்ணதாசன் (பாபநாசம்), கலைச்செல்வன் (அம்மாபேட்டை), வட்டாட்சியர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமார், நந்தினி, ராஜன் , நவரோசா  மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.