தஞ்சாவூர்: நினைத்த காரியங்கள் நிறைவேற... பாவங்கள் அனைத்தும் பொடி, பொடியாக கரைந்து போகணுமா. அப்போ நீங்க தஞ்சை மாவட்டம் பாபநாசத்திற்கு செல்லுங்கள். பாபநாசம்... பாவங்கள் நாசமடையும். நம் பாவங்கள் அனைத்தும் நாசமாகிவிடும். அப்படிப்பட்ட சிவஸ்தலம்தான் பாபநாசம். ஊரின் பெயரும் அதுதான். தஞ்சாவூர் மாவடத்தில் அமைந்துள்ளது 108 சிவாலயம் என்று அழைக்கப்படும் கோயில்.


பழமையான புராணத் தொடர்பு கொண்ட கோயில்


தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் உள்ளது பாபநாசம். மிகவும் பழமையான, புராணத் தொடர்பு கொண்ட திருத்தலம் இது. கீழை ராமேஸ்வரம் எனும் பெருமை கொண்ட கோயில். எந்தத் தலத்துக்கும் இல்லாத பெருமையும், அதிசயமும் இங்கு உள்ளது. ஆமாங்க. இங்கு 108 சிவலிங்கங்கள் உள்ளன. இத் தலத்துக்கு வந்து தரிசித்தால் 108 சிவாலயங்களுக்குச் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.




ராமபிரான் வழிபட்ட திருத்தலம்


தலம், தீர்த்தம், மூர்த்தம் எனும் விசேஷங்களைக் கொண்ட திருத்தலங்களில் இதுவும் உண்டு. இக்கோயிலில் அருள்பாலிக்கும் சுவாமிக்கு ராமலிங்கேஸ்வரர் எனப்பெயர். ராமபிரான் வழிபட்ட திருத்தலம் இது. அம்பாள் பர்வதவர்த்தினி. வில்வம் தல விருட்சமாக உள்ளது. குடமுருட்டி, சூரிய புஷ்கரணி, சந்திர புஷ்கரணி, அக்னி தீர்த்தம் என இந்தத் தலத்தின் தீர்த்தங்கள் அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்தவை.


ராவணனை வதம் செய்துவிட்டு, லங்காபுரியை அழித்து விட்டு, ராமேஸ்வரம் வந்து அங்கிருந்து ராமபிரான், சீதை, லட்சுமணர் மற்றும் அனுமருடன் வந்துகொண்டிருந்தார். அப்போது இந்த பாபநாசம் தலத்திற்கு வந்த போது, ஒரு விஷயத்தை உணர்ந்தார்கள். ராமபிரானை, ஏதோவொன்று நிழல் போன்ற உருவத்தில் தொடர்ந்து கொண்டிருப்பதாக நினைத்தனர். யுத்தத்தில் பலரையும் கொல்ல நேர்ந்த தோஷத்துக்கு ஆளானதால், அந்தப் பாவம் தன்னைப் பின் தொடர்வதாக உணர்ந்தார் ராமர். இதனால் காவிரியும் தென்னந்தோப்பும் வயல்வெளிகளுமாக குளிர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருக்கும் இந்தத் தலத்தில், 108 சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வேண்டினால், பாவங்கள் அனைத்தும் நீங்கப் பெறலாம் என்று ராமபிரான் கூறவே, அதன்படி, காவிரியில் இருந்து மணல் எடுத்து வந்தார்கள்.


ராமபிரான் அமைத்த ஆறடி உயர சிவலிங்கம்


அந்த மணலைக் கொண்டு சிவலிங்கம் பிடித்து வைத்தார்கள். ஒவ்வொரு லிங்கமாக பிடித்துப் பிடித்து வைத்துக் கொண்டே வந்தார்கள். முன்னதாக, காசிக்குச் சென்று அங்கிருந்து சிவலிங்கம் ஒன்றை எடுத்துவரச் சொல்லி அனுமனை அனுப்பி வைத்தார் ராமர். அத்தனை சிவலிங்கங்களுக்கும் மூலவராக, நாயகராக ஆறடி உயரத்தில் சிவலிங்கம் அமைத்தார் ராமபிரான். அதுவே கருவறையில் உள்ளது என்று ஸ்தல புராணம் தெரிவிக்கிறது.


ராமர் வழிபட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலவர், ராமலிங்கேஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார். அவருக்கு அருகில் பிராகாரத்தில் 106 சிவலிங்கங்கள் அமைக்கப்பட்டன. காசியில் இருந்து அனுமன் கொண்டு வந்த சுமார் ஐந்தடி உயரமுள்ள லிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆக மொத்தம் 108 லிங்கங்களை அமைத்து ராமபிரான் வழிபட்ட சிவ ஸ்தலம் இது. ராமலிங்கேஸ்வரர் கோயில் என்று சொல்லப்பட்டாலும் 108 சிவாலயம் என்றுதான் பக்தர்களால் அழைக்கப்படுகிறது.


பாபங்களை நாசம் செய்து தோஷத்தை போக்கும் தலம்


ராமபிரானின் பாபங்களையெல்லாம் நாசம் செய்து அவரின் தோஷத்தைப் போக்கிய தலம், பாபநாசம் என்றே அழைக்கப்பட்டது. இன்றும் இந்தத் தலத்துக்கு வந்து 108 சிவலிங்கங்களையும் தரிசிப்பவர்களின் பாவங்களையெல்லாம் போக்கி அருள்புருகிறார் சிவன் என்கின்றனர் பக்தர்கள்.


108 லிங்கங்கள் கொண்ட இக்கோயிலுக்கு வாழ்வில் ஒருமுறையேனும் வந்து தரிசித்தால், நம் முன் ஜென்மத்துப் பாவங்கள் உட்பட சகல பாவங்களும் நம்மை விட்டு விலகிவிடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். நினைத்த காரியம் கைகூட வேண்டும் என நினைப்பவர்கள், 108 சிவலிங்கங்களையும் தரிசனம் செய்தால், விரைவில் காரியம் நடந்தேறும். காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட லிங்கம் உள்ள தலம் என்பதால் காசிக்கு இணையான தலம் என்பார்கள். அதேபோல் ராமர் வழிபட்ட ராமேஸ்வரத்துக்கு இணையாக இந்தத் தலமும் ராமர் வழிபட்ட ஸ்தலம் என்று போற்றுகின்றனர் பக்தர்கள். மகா சிவராத்திரி நன்னாளில், சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.