தஞ்சாவூர் மாநகாராட்சியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ், நீண்ட காலமாக கையகப்படுத்தி வைத்திருந்த மாநகாராட்சிக்கு சொந்தமான இடத்தை அதிரடியாக கையகப்படுத்தி வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் தஞ்சை பழைய பஸ் நிலையம்  அண்ணா சிலை அருகில், மாநகராட்சிக்கு சொந்தமான சுதர்சன சபா உள்ளது. இந்த சபா குத்தகை அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இந்த சபாவின் முன்பகுதியில் கடைகளில்,  ஒரு உணவகம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக உணவகம் செயல்பட்டு  வந்தது. அதற்கு உரிய தகவல் கொடுத்து காலி செய்யாததால், சீல் வைத்தனர்.  இதே போல் பழமையான தியேட்டர், சபா, கிளப் உள்ளிட்டவைகளை சீல் வைத்தனர்.


மேலும், கீழவாசல், மீன் மார்கெட், அண்ணாசிலை உள்ளிட்ட பகுதிகளில் மாநகாராட்சிக்கு சொந்தமான இடத்தை காலி செய்ய வரும் தீபாவளி பண்டிகை வரை கால அவகாசம் வழங்கி உள்ளனர். தொடர்ந்து, மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை, எங்கு எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது என மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவிட்டார். இதனை அடுத்து, புதுக்கோட்டை சாலை பரிசுத்தம் நகரில் மாநகராட்சி பூங்கா உள்ளது. இதில், சிலர் பூப்பந்தாட்டச் சங்கம் அமைத்து, உள் விளையாட்டரங்கம் ஏற்படுத்தியுள்ளனர்.




இந்த இடம் ஆக்கிரமிப்பில் உள்ளதாக மாநகராட்சி அலுவலகத்தில் சிலர் புகார் செய்தனர். இதன்  பேரில் மாநகராட்சி ஆணையர் க. சரவணகுமார் உத்தரவின் பேரில் உதவிச் செயற்பொறியாளர்  எம். ராஜசேகரன் மற்றும் அலுவலர்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். இதில், ஆக்கிரமிப்பில் இருந்த 5,323 சதுர அடி இடம் ஆக்கிரமிப்பில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, இந்த இடத்தை அலுவலர்கள் கையப்படுத்தி, இவ்விடத்தில் அத்துமீறி நுழைபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்புப் பதாகையையும் கட்டி ஒட்டி வைத்தனர்.


 மேலும் மாநகாராட்சி அதிகாரிகள் கூறுகையில், தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெறுவதால், அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தஞ்சாவூரில் பல்வேறு இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என தெரிய வருகின்றது. மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்கள் உடனடியாக அவர்களாகவே காலி செய்து கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் அதிகாரிகள் காலி செய்வார்கள். தொடர்ந்து, தஞ்சாவூரில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களிலுள்ள ஆக்கிரமிப்புகள் ஒவ்வொன்றாக கையகப்படுத்தப்படும்.




தஞ்சாவூரில் மக்கள் கூடும் இடங்களில், சாலையின் ஒரத்தில் கடைகளை வைத்திருப்பவர்கள், ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகின்றது. வணிகர்கள், தங்களது கடையின் முன்புறம், மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் அகற்றி கொள்ள வேண்டும். இதே போல் உரிய அனுமதியில்லாமல் பாதாள சாக்கடை இணைப்பு, குடிநீர் இணைப்பு உள்ளிட்டவைகளை வைத்திருந்தால், மாநகராட்சி அலுவலகத்தில் பணத்தை செலுத்தி ரசீது பெற்றிருக்க வேண்டும். அதிகாரிகளுக்கு தெரிய வந்தால், அபராதம் விதித்து, இணைப்புகள் துண்டிக்கப்படும் என்றனர்.