தஞ்சாவூர் அண்ணா சிலையில் இருந்து பனகல் கட்டடம் செல்லக்கூடிய சாலையோரத்தில் செல்போன் கடைகள், துணிக் கடைகள், கைப்பேசி பழுது பார்க்கும் கடைகள், தேநீர் கடைகள், காலணி கடைகள் என 54 கடைகள் உள்ளன. இக்கடைகள் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. மழைநீர் வடிகால் மீது இந்த கடைகள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்பகுதியிலுள்ள மழை நீர் வடிகால் மீது இக்கடைகள் கட்டப்பட்டுள்ளதாக் கூறப்படுகிறது. இந்தக் கடைகளை அப்புறப்படுத்தி மழை நீர் வடிகால் கட்ட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எனவே இக்கடைகளைக் காலி செய்யுமாறு வியாபாரிகளிடம் மாநகராட்சி அலுவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், தற்போது கடைகள் இருக்கும் இடத்துக்கு பின் பகுதியில் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே, நவம்பர் 8 ஆம் தேதி கடைகளைக் காலி செய்ய மாநகராட்சி அலுவலர்கள் பொக்லின் இயந்திரத்துடன் அலுவலர்கள் சென்றனர். அப்போது அங்கிருந்த வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடைகள் இடிக்கப்படவில்லை. இதையடுத்து, இக்கடைகளுக்கான மின் இணைப்பை துண்டிப்பதற்காக மாநகராட்சி அலுவலர்கள் நவம்பர் 16 ஆம் தேதி சென்றபோது, அவர்களை வியாபாரிகளும், ஆளுங்கட்சியை சேர்ந்த திமுகவினரும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு ஊழியர் தற்கொலை செய்து கொள்ள முயன்றதால், மாநகராட்சி அலுவலர்கள் திரும்பிவிட்டனர்.
இந்நிலையில், மாநகராட்சி அலுவலர்கள் முன்னிலையிலும், காவல் துறையினரின் பாதுகாப்புடனும் 54 கடைகளுக்கான மின் இணைப்பு பிற்பகல் துண்டிக்கப்பட்டது. பொக்லீன் இயந்திரம் மூலம் அனைத்து கடைகளின் மின் இணைப்பை அதிரடியாக துண்டித்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வியாபாரிகள் கடைகளை அடைத்திருந்தனர்.இந்நிலையில்,ஏழாவது நாளாக நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் டைமண்ட் ராஜா நிருபர்களிடம் கூறுகையில்,எந்த அறிவிப்பும் இல்லாமல், 56 கடைகளையும் திடீரென காலி செய்ய வேண்டும் எனக் கூறி மின் இணைப்பையும் துண்டித்துள்ளனர். இதனால், வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்குவதாக மாநகராட்சி நிர்வாகம் கூறுகிறது. ஆனால், அந்த இடத்தில் ஏற்கெனவே 300 கடைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு இறைச்சி, மளிகைக் கடைகள் உள்ளன. இங்குள்ள வியாபாரிகள் துணி, கைப்பேசி கடைகளை நடத்தி வருகின்றனர்.
இந்தக் கடைகளின் கீழே கால்வாய் செல்வதாகக் கூறுகின்றனர்.இந்த இடத்தை பர்மா அகதிகளாக வந்த இவர்களுக்கு அறிஞர் அண்ணா ஒதுக்கீடு செய்து கொடுத்தார்.அறிஞர் அண்ணா கொடுத்த இடத்தை இவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கூறுகின்றனர். ஆனால், கடந்த மாதம் வரை வரியையும், வாடகையையும் மாநகராட்சி நிர்வாகம் வசூல் செய்துள்ளது.மேலும், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்தலும் செய்யப்பட்டு, அதற்கான கால அவகாசம் 2025 ஆம் ஆண்டு வரை உள்ளது.
தமிழக முதல்வர் நேரடியாகத் தலையிட்டு 56 வணிகர்களையும் காப்பாற்ற வேண்டும். இந்தக் கடைகளுக்கு கீழே வடிகால் சீரமைக்கும் பணி நடைபெறுவதற்கு நாங்களும் விரும்புகிறோம். இதற்கு பதிலாக, இக்கடைகளுக்குப் பின்னால் 10 அடி உள்ளே கடைகளை தற்காலிகமாக அமைத்து தர வேண்டும். வடிகாலை சீரமைத்து தந்த பின்னர் இதே இடத்தில் கடையைக் கட்டித் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.அவருடன் மாவட்ட செயலாளர் முருகேசன், நகர தலைவர் வாசுதேவன், மாவட்ட நிர்வாகி திலகர், சேகர் மற்றும் பலர் உடனிருந்தனர்.