TN Heavy Rain: தஞ்சாவூர் மாவட்டத்தில்  தொடர் மழை பெய்து வருவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனார்.


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல இடங்களில் எதிர் நோக்கும் அதிக மழை காரணமாக மாணவர்கள் நலன் கருதி இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.


தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தீபாவளி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மாலை நேரங்களில் பெய்யும் மழையால் பொதுமக்கள் தீபாவளி பொருட்களை வாங்க முடியாமல் அவதியடைகின்றனர். இதனால் தரைக்கடை வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மழையால் விவசாயிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால் தஞ்சை அருகே வல்லம், கல்விராயன்பேட்டை, ஆலக்குடி உள்பட பல இடங்களில் அறுவடை  பணிகள் பாதிக்கப்பட்டது. நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக சாலைகளில் காய வைக்கப்பட்டு வந்த விவசாயிகளின் நெல் குவியல்கள் மீண்டும் நனைந்தது.


தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை நடப்பாண்டு இலக்கை மிஞ்சி குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் இன்னும் குறுவை அறுவடை நடந்து வருகிறது. இதில் தஞ்சை அருகே வல்லம், வண்ணாரப்பேட்டை, கரம்பை, ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி பகுதிகளில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யும் பணிகளும் நடந்து வருகிறது. மழை காரணமாக கொள்முதல் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. தற்போது கடந்த 4 நாட்களாக கொள்முதல் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது.


இந்நிலையில் மீண்டும் மழை பெய்து வருவதால் கொள்முதல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையில் விவசாயிகள் காயவைத்து வரும் நெல்லும் மீண்டும், மீண்டும் நனைந்து ஈரப்பதம் அதிகரித்து வருகிறது. இதனால் நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவுபெய்த மழையால் சாலையோரத்தில் குவித்து வைக்கப்பட்டு இருந்த நெல் குவியல்கள் மீண்டும் நனைந்தது.