தமிழில் பதிகம் பாடி எமதர்மராஜர் சன்னதியில் வழிபட்ட மணிப்பூர் ஆளுநர் இல கணேசன்.
மணிப்பூர் ஆளுநரும் மேற்கு வங்காள பொறுப்பு ஆளுநருமான இல கணேசன் திருச்சி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக தனது குடும்பத்தினருடன் வருகை தந்து பல்வேறு கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். மேலும், அவர் திருச்சியில் இருந்து தனது குடும்பத்தினருடன் சாலை வழியாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட ஸ்ரீவாஞ்சியத்தில் உள்ள வாஞ்சிநாத சுவாமி திருக்கோயில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்த அப்பொழுது திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பெயரில் 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் ஸ்ரீவாஞ்சியத்தில் உள்ள வாஞ்சிநாத சுவாமி திருக்கோயில் முழுவதுமாக காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இல கணேசன், சாமி தரிசனம் செய்து முடிக்கும் வரை மற்ற நபர்களை சுவாமி தரிசனம் செய்ய காவல்துறையினர் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட ஸ்ரீவாஞ்சியத்தில் உள்ள வாஞ்சிநாத சுவாமி திருக்கோயில் பிரசித்தி பெற்றது. இந்தியாவிலேயே இந்த கோவிலில் எமதர்ம ராஜர் சித்திரகுப்தருக்கு என்று தனி சன்னதி உள்ளது இந்த கோவிலின் தனி சிறப்பு. இந்த ஆலயத்தில் சாமி தரிசனம் செய்வதற்காக மணிப்பூர் ஆளுநர் மேற்கு வங்காள பொறுப்பு ஆளுநருமான இல.கணேசன் சகோதரர் கோபாலன் மற்றும் அவரது மனைவி இந்திராவுடன் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்திருந்தார்.
அப்போது வெள்ளை உடையில் வந்த இல.கணேசனை திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் உள்ளிட்ட அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து கோவிலுக்கு அருகில் உள்ள பக்தர்கள் தங்கும் விடுதிக்கு சென்ற ஆளுநர் இல.கணேசன் காவி வேட்டி காவி துண்டு அணிந்து ஆலயத்திற்கு தரிசனம் செய்ய வந்தார். ஆலயத்தின் புனித தீர்த்த குளமான புத்தகங்கை குளத்திற்குச் சென்ற அவர் அங்கு குளத்து நீரில் பாதத்தை கழுவி தலையில் தண்ணீர் தெளித்துக் கொண்டார். அதேபோன்று தனது சகோதரர் மற்றும் அவரது மனைவியும் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் உள்ள எமதர்ம ராஜாவின் தனி சன்னதிக்கு சென்றுள்ளார். அங்கு சிறப்பு பூஜையில் அவர் தனது சகோதரர் குடும்பத்துடன் கலந்து கொண்டார். அப்போது கோளர் திருப்பதிகம் மற்றும் நவகிரக துதியினை தமிழில் பாடி எமதர்மராஜர் சன்னதிக்கு முன்பு இல. கணேசன் சகோதரர் குடும்பத்துடன் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தார். வாஞ்சிநாத சுவாமியை வழிபட்ட பின்பு புறப்பட்டு சென்றனர். கோவிலை விட்டு வெளியில் வரும்போது செய்தியாளர்கள் கேட்டதற்கு நாட்டுக்கு சேவை செய்வதற்காக ஆயுள் விருத்தி தரவேண்டும் என்பதற்காக இந்த ஆலயத்தில் வழிபடுவதற்காக வந்தேன் நான் தஞ்சாவூர் காரன் என்று கூறினார்.
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தை எப்படி பார்த்தீர்கள் என்று கேட்டதற்கு நீங்கள் எப்படி பார்க்கிறீர்களோ அப்படித்தான் பார்க்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார். இந்த நிலையில் வாஞ்சிநாத சுவாமி திருக்கோவிலில் உள்ள எமதர்மன் சன்னதி சித்ரகுப்தர் சன்னதி மற்றும் விநாயகர் சன்னதி ஆகிய சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடத்திய இல கணேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் சாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து சாலை மார்க்கம் வழியாக சீர்காழியில் உள்ள வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக புறப்பட்டு சென்றார் மணிப்பூர் ஆளுநர் இல கணேசன் நன்னிலத்தில் சாமி தரிசனம் செய்வதற்காக திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் மற்றும் திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட ஏராளமான அரசுத்துறை அதிகாரிகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கோவிலின் முன்பாக காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.