தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக அவரது சொந்த மாவட்டமான திருவாரூருக்கு நேற்று வருகை தந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக திருச்சி வந்தடைந்த மு.க.ஸ்டாலின், அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர் மாவட்டத்திற்கு வந்தடைந்தார், அப்பொழுது திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே செருமங்கலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவதை திடீரென்று தனது வாகனத்தை நிறுத்தி நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அப்பொழுது விவசாயிகளிடமிருந்து சரியான முறையில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா என விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

 

தொடர்ந்து விவசாயிகளிடம் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர், இயற்கை விவசாயம் தொடர்பாக அவர்களிடம் கேட்டறிந்தார் அப்போது மறைந்த பாரம்பரிய நெல் மீட்பாளர் நெல் ஜெயராமன் அண்ணன் மகன் ராஜுவிடம் இயற்கை ரக நெல் விதைகளை  பெற்றுக்கொண்டு அது தொடர்பான விவரங்களை கேட்டறிந்தார். இந்த நேரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய நெல் திருவிழாவை அரசே ஏற்று நடத்த வேண்டும், அரசு நிகழ்ச்சியாக நடத்த வேண்டுமென இயற்கை பாரம்பரிய நெல் உற்பத்தியாளர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து காட்டூரில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் தாயார் அஞ்சுககத்தம்மாள் நினைவிடத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் தாய்  அஞ்சுகத்தம்மாள் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 



அதனைத் தொடர்ந்து காட்டூர் பகுதியில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டு வரும் கலைஞர் அருங்காட்சியகம் பணிகளை ஆய்வு செய்வதாக இருந்த நிகழ்வு திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் கலைஞர் அருங்காட்சியகத்தை பார்வையிடாமல் தமிழ்நாடு முதலமைச்சர் திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தனது அத்தையின் இல்லத்திற்கு சென்று தங்கினார். நிகழ்வு ரத்து தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரித்தபோது நேரமின்மை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

 

இந்த நிகழ்வுகளில் திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து திருவாரூர் சன்னதி தெருவில் இருந்து இன்று காலை 8 மணிக்கு புறப்படும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் மகப்பேறு சிகிச்சைக்கான தனி மருத்துவ பிரிவு வளாகத்தில் திறந்து வைக்கிறார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்திக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் நிகழ்வுகளின் தொடர்ச்சியாக முன்னாள் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி பிறந்த சொந்த ஊரான நாகை மாவட்டம் திருக்குவளைக்கு சென்று கருணாநிதி வாழ்ந்த இல்லத்தை பார்வையிடுகிறார். அதன் பின்னர் சாலை மார்க்கமாக தனது மனைவி துர்கா ஸ்டாலின் பிறந்த ஊரான திருவெண்காடு சென்று அவரது இல்லத்தில் தங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அதன் பின் மீண்டும் சென்னை திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது