மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பழையார் மீனவ கிராம். இங்குள்ள மீன்பிடி துறைமுகத்தில் பழையார் சுற்றியுள்ள ஏராளமான மீனவ கிராமங்களில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வது வழக்கம். இந்நிலையில் பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 2 ம் தேதி சேதுராமன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மதி, ஹரிஷ், நகுலன், முத்தையா, ராஜதுரை உள்ளிட்ட ஐந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.
அப்போது இவர்கள் பழையார் துறைமுகத்திலிருந்து நான்கு நாட்டிகல் மையில் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, கடலில் திடீரென பலத்த சூறைக்காற்று ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி நிலைகுலைந்த விசைப்படகு உடைந்து, தண்ணீர் உள்ளே புக தொடங்கி மெல்ல நடுக்கடலில் மூழ்கியது. படகில் இருந்த மீனவர்கள் கடலில் குதித்து தங்கள் உயிரை காப்பாற்ற தத்தளித்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரைக்கால் மீனவர்கள் கடலில் தத்தளித்த ஐந்து மீனவர்களையும் பத்திரமாக மீட்டு, காரைக்கால் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.
இந்த சூழலில் பழையார் துறைமுகத்தில் இருந்து நான்கு நாட்டிகல் தொலைவில் மீன்பிடித்த போது படகில் உடைப்பு ஏற்பட்டு நடுக்கடலில் மூழ்கிய சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள விசை படகை, பழையாறை சேர்ந்த சக மீனவர்கள் கடந்த மூன்று நாட்களாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தம் செய்து, நடுக்கடலில் மூழ்கிய படகை மீட்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வந்தனர். பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் பத்துக்கும் மேற்பட்ட படகில் சென்று கடலில் மூழ்கிய விசைபடகை கட்டி இழுத்து வந்து கரை சேர்ந்தனர்.
அதனைத் தொடர்ந்து கரையிலிருந்து மேலே எடுக்க பொக்லையன் இயந்திரம் மூலம் படகை கயிறு கட்டி கரை ஏற்றினர். மேலும் இது குறித்து அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு மீன் பிடிக்க செல்லும் எங்களுக்கு தற்போது போதிய மீன் கிடைக்காததாலும், அவ்வாறு கிடைக்கும் குறைந்த அளவிலான மீன்களையும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வியாபாரிகள் வந்து வாங்கிச் இல்லாததாலும், வாழ்வாதாரம் இழந்து பெரும் இன்னல்களை சந்தித்து வருகிறோம். இதுபோன்ற சமயங்களில் மேலும் எங்களுக்கு பேரிடியாக இயற்கை சீற்றத்தால் படகுகள் கவிழ்ந்து, நீரில் மூழ்வதும் தொடர் கதையாக இருந்துவருகிறது. மழை புயல் வெள்ளம் என இயற்கை சீற்றங்களில் தங்கள் உயிரை பணயம் வைத்து இத்தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் இதனை அரசு கவனத்தில் கொண்டு இதுபோன்று ஏற்படும் இழப்புகளுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.