திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆய்வு செய்தார்


தமிழகஅரசின் கடந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் டெல்டா மாவட்டங்களில் 4 ஆயிரத்து 964 கிலோ மீட்டர் தூரம் சிறு குறு வாய்க்கால்களை தூர்வார சிறப்பு தூர்வாரும் நிதியாக 80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் 1,200 கிலோ மீட்டர் தூரத்திற்கு 115 இடங்களில் இந்த சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சிறப்பு தூர்வாரும் பணிகளை தமிழக முதலமைச்சர் பார்வையிட்டு தற்போது ஆய்வு செய்து வருகிறார்.


அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு நீர்வளத் துறை சார்பில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கொத்தங்குடி வாய்க்கால் மற்றும் பேரளம் வாய்க்கால் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் தற்போது பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் கொத்தங்குடி வாய்க்கால் 9.95 லட்சம் மதிப்பீட்டில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரப்பட்டு உள்ளது. இதன் மூலம் 232 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் கொத்தங்குடி கடுவங்குடி ஆகிய கிராமங்கள் இந்த வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறுகின்றன. 





இதனையடுத்து பேரளம் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பேரளம் வாய்க்கால் 8.50 லட்சம் மதிப்பீட்டில் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரப்பட்டு உள்ளது. இந்த வாய்க்கால் மூலம் 177 ஏக்கர் பரப்பளவில் உள்ள வயல்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் இந்த வாய்க்கால் மூலம் பேரளம் வீராநத்தம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயன் பெறுகின்றனர். இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் ஏவா வேலு கே என் நேரு சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


அதனை தொடர்ந்து திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள இல்லத்தில் ஓய்வெடுத்த தமிழக முதல்வர் மாலை காட்டூரில் அமைந்துள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார்.அதனைத் தொடர்ந்து அதே பகுதியில் கட்டப்பட்டு வரும் கலைஞர் அருங்காட்சியக பணிகளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது அருங்காட்சியகத்தில் அமைய உள்ள அண்ணா, பெரியார், கருணாநிதி ஆகியோரின் வரலாற்றுக் குறிப்புகள் குறித்தும் நூலகம் குறித்தும் கட்சியினரிடையே கேட்டறிந்தார்.




இரு இடங்களிலும் ஏராளமான பொதுமக்கள் தமிழக முதல்வரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர். அப்போது கூடியிருந்த சிறுவர்களிடையே உரையாடிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சிறுவர்களுக்கு இனிப்புகள் வழங்கி பேனா உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, ஏ.வா.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.


முன்னதாக கலைஞர் அருங்காட்சியகத்திற்கு திமுகவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் காவல்துறையினருடன் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வருகையையொட்டி காட்டூர் பகுதியில் திருச்சி மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் கண்காணிப்பில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.