திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை மையத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 

தமிழ்நாட்டு முதலமைச்சராக ஸ்டாலின் முதல் முறையாக அவரது சொந்த மாவட்டமான திருவாரூரில் நேற்று மாலை வருகை தந்தார், அதனைத் தொடர்ந்து மன்னார்குடி அருகே செருமங்கலம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அதனைத் தொடர்ந்து திருவாரூர் அருகே காட்டூர் கிராமத்தில் மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவரது அத்தை இல்லத்தில் இரவு தங்கினார்.

 

இந்நிலையில் இன்று காலை சன்னதி தெருவில் அவர் தங்கியிருந்த இல்லத்திலிருந்து நடைபயணமாக புறப்பட்டு தெற்கு வீதி வரை நடந்து சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். தொடர்ந்து  திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தூர்வாரும் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்பொழுது மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, திடீரென வாகனத்தை நிறுத்தி ஓடம்போக்கி ஆற்றில் நடைபெற்ற தூர்வாரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார் மேலும் ஆற்றினை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் அங்கு வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து 12 கோடி ரூபாய் மதிப்பில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார்.



பின்னர் அதனைத் தொடர்ந்து குழந்தைகள் நல கட்டிடத்தை ஆய்வு செய்த முதலமைச்சர் முதல் தளத்தில் அவசர சிகிச்சை பிரிவு மகப்பேறு மருத்துவம் ரத்த வங்கி உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு மருத்துவமனைக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளதா என மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து தமிழ்நாட்டில் 100% கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட காட்டூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் விமலா முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணனிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து சான்றிதழை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் வெள்ளியால் செய்யப்பட்ட செங்கோல் ஒன்றினை பரிசளித்தார். இதேபோன்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருக்குறள் எழுதிய பலகையை தமிழக முதல்வருக்கு பரிசாக வழங்கினார்.

 

இந்த நிகழ்வில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்,நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ கே எஸ் விஜயன்,சட்டமன்ற உறுப்பினர்கள் பூண்டி கலைவாணன்,டிஆர்பி ராஜா,தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்,திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜோசப் ராஜ் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து நாகை மாவட்டம் திருக்குவளைக்கு தனது குடும்பத்தினருடன் வாகனத்தில் புறப்பட்டு சென்றார்.