நாடுமுழுவதும் கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை என்பது உயர்ந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக காய்கறிகளின் விலை ஒவ்வொரு நாளும் நினைத்து பார்க்க முடியாது அளவிற்கு உச்சத்தை தொட்டது வருகிறது. சமையலுக்கு மிகவும் இன்றியமையாத தக்காளி ஒரு கிலோ விலை 100 ரூ முதல் 150 ரூபாய் வரை சில தினங்களுக்கு முன் விற்பனையானது, பொதுமக்களை காய்கறிகளை பார்த்து பார்த்து வாங்க வேண்டிய சூழலுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் டவுன் ஸ்டேஷன் நம்மாழ்வார் தெருவை சேர்ந்த சுந்தரமூர்த்தி 31 ஆண்டுகளாக காவல்துறையில் பணியாற்றி உதவி ஆய்வாளராக கடந்த 2016 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற நாள் முதல் தனது காவல்துறை பணிக்கு மட்டுமே ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறதே தவிர இயற்கை சார்ந்த ஆர்வத்திற்கு ஓய்வு அளிக்கப்படவில்லை என இயற்கை காவலர் சுந்தரமூர்த்தி நிரூபித்துக் காட்டி வருகிறார். ஓய்வு பெற்ற நாளில் இருந்து தனது மொட்டை மாடியில் உள்ள 500 சதுர அடி பரப்பளவில் பசுமை தோட்டம் அமைத்து பல்வேறு விதைகளை விதைத்துள்ளார். காலப்போக்கில் இந்த மாடித் தோட்டத்தில் மீது அவருக்கு ஏற்பட்ட அதீத ஆர்வம் காரணமாக தற்போது அவரின் வீட்டின் மாடி முழுவதும் பாரம்பரிய காய்கறிகளாலும் , மலர்களாலும் நிரம்பி காணப்படுகின்றது.
நாம் வேண்டாம் என்று குப்பையில் தூக்கி எறியும் ஒவ்வொரு பொருளையும் பயன்படுத்தி காய்கறி செடிகள் வளர்ப்பிற்கு ஏற்றவாறு வடிவமைத்து அதில் விதைகளை விதைத்து பராமரித்து வருகிறார். பழைய ட்ரம், ஏர் கூலர், தண்ணீர் கேன்கள், பிளாஸ்டிக் கப்புகள், பால் பாக்கெட்டின் கவர்கள் உட்பட அனைத்தையும் மாடித் தோட்டம் அமைக்க பயன்படுத்தியிருக்கிறார் காவலர் சுந்தரமூர்த்தி. கத்தரிக்காய் ,தக்காளி மற்றும் பாரம்பரிய மிதிபாகல், காந்தாரி மிளகாய், சிவப்பு காராமணி உள்ளிட்ட காய்கறிகளை விதைத்து எந்த ஒரு வேதியல் மூலப் பொருளையும் பயன்படுத்தாமல் வீட்டில் சேகரிக்கப்படும் குப்பைகளை மண்புழு கொண்டு உரமாக்கி அதிலிருந்து உருவாகும் உரத்தினை செடிகளுக்கு உரமாக பயன்படுத்தி நச்சு தன்மை இல்லாத ஆரோக்கியமான காய்கறிகளை உற்பத்தி செய்கிறார்.
பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக விதை வழங்கிவரும் சுந்தரமூர்த்தி ஒவ்வொருவருக்கும் மாடித்தோட்டம் அமைப்பது குறித்த விரிவாக எடுத்துரைக்கிறார். மேலும் தமிழ்நாட்டின் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இவரை முகநூலில் பின்தொடர்வோருக்கு கூரியர் மூலம் விதைகளை அனுப்பி வைத்து தகுந்த ஆலோசனைகளையும் வழங்கிவருகிறார். இவரிடம் இருந்து மயிலாடுதுறையை சேர்ந்த பல பொதுமக்கள் நேரில் வந்து விதைகளை வாங்கி செல்கின்றனர். இவர் உருவாக்கிய வாட்ஸ் அப் குழு மூலம் தினசரி அவர் மாடித்தோட்டத்தில் புதிதாக மேற்கொள்ளும் முயற்சிகளை அதில் பதிவிட்டு அதற்கான விளக்கத்தையும் மற்றவர்களுக்கு அளித்து வருகிறார். பைசா செலவின்றி ஜீரோ பட்ஜெட்டில் மாடித்தோட்டம் அமைத்து பராமரித்து வரும் ஓய்வுபெற்ற உதவி காவல் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தன்னைப்போலவே வருங்கால இளைஞர்களும் மாடித்தோட்டம் அமைப்பதில் ஆர்வம் காட்டி இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.