இந்திய அளவில் தற்கொலையால் உயிரிழப்புகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது என்று மருத்துவக் கல்லூரி முதல்வர் மருது துரை வேதனையுடன் தெரிவித்தார்.


தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. மனநல மருத்துவ துறை இணை பேராசிரியை துணைத் தலைவர் மீனாட்சி வரவேற்றார். மனநல நல்லாதரவு மன்றத்தை சென்னை மனநல மருத்துவ துறை பேராசிரியர் டாக்டர் அசோகன் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் முன்னிலை வைத்தார்.

கருத்தரங்கில் மருத்துவக் கல்லூரி முதல்வர் மருது துரை  தலைமை தாங்கி பேசியதாவது:-

தமிழகத்தில் சாலை விபத்துகளில் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில் தற்கொலையால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. இந்திய அளவில் தற்கொலையால் உயிரிழப்புகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. தற்கொலைகளை நாம் தடுக்க வேண்டும். அவர்களுக்கு அந்த எண்ணம் வராமலேயே இருக்க செய்ய வேண்டும். தற்கொலை பிரச்சனை தற்போது சமூக பிரச்சனையாக மாறி உள்ளது. எலி பேஸ்ட் உள்ளிட்ட பல்வேறு விஷக் கொல்லிகள் சாதாரண பெட்டி கடைகளிலே அதிக அளவில் கிடைக்கிறது. இதனை நாம் தடுக்க வேண்டும்.





எளிதான முறையில் எலி பேஸ்ட் கிடைப்பதால் தற்கொலை எண்ணத்தில் உள்ளவர்கள் அதனை வாங்கி சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். கடைகளில் எலிபேஸ்ட் உள்ளிட்ட விஷக்கொல்லி பொருட்கள்  விற்பனையை தடுக்க வேண்டும். தஞ்சாவூர் மாநகராட்சியில் ஆணையர் சரவணகுமார் உத்தரவுபடி கடைகளில் எலிபேஸ்ட் விற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருவது பாராட்டுக்கு உரியது.

தொடர்ந்து இவ்வாறு செய்வது மூலம் அதன் விற்பனையை தடுக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் நிலைய அலுவலர் செல்வம், கண்காணிப்பாளர் மத்தியாஸ், பிசியோதெரபிஸ்ட் சுமதி மற்றும் டாக்டர்கள், பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மனநல மருத்துவத் துறை உதவி பேராசிரியை சண்முகப்பிரியா நன்றி கூறினார். முன்னதாக மருத்துவக் கல்லூரி மற்றும் செவிலியர் கல்லூரி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக நடந்த தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், தற்கொலை என்பது எந்த ஒரு துயருக்கான தீர்வும் கிடையாது. அதனை எதிர்கொள்வது தான் வாழ்க்கைக்கு மிக முக்கியமானது என்றார். ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு வாழ்க்கை கொண்டாடுவோம்" ஒரே நாளில் எல்லாம் மாறாது" போன்ற பல்வேறு தற்கொலைக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் மருத்துவக் கல்லூரி பிரதான சாலைகளில் ஊர்வலமாக வந்தனர். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.