ஊரடங்கு காரணமாக தமிழ்நாட்டில் கடந்த மாதம் பத்தாம் தேதியில் இருந்து அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் மது கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த மதுப் பிரியர்கள் ஏராளமானோர் குவிந்தவண்ணம் உள்ளனர். மேலும் காரைக்காலில் இருந்து மதுபாட்டில்களை வாங்கிவந்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. காவல் துறையினரும் தொடர்ந்து வாகன தணிக்கை செய்து மதுபாட்டில் கடத்தி வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திற்கு உட்பட்ட வடகண்டம் பகுதியில் குடவாசல் காவல் ஆய்வாளர் ரேகாராணி, உதவி ஆய்வாளர் தியாகராஜன், மற்றும் காவல் துறையினர் முழு ஊரடங்கையொட்டி வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்பொழுது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் வந்துள்ளனர், அவர்களிடம் ஒரு அட்டைப் பெட்டி இருந்துள்ளது.
உடனடியாக காவல்துறையினர் அவர்களை மறைக்க முற்பட்ட பொழுது இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு இருவரும் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் அந்த இரு சக்கர வாகனத்தை காவல்துறையினர் சோதனை செய்தபோது, அதில் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 40 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தப்பி ஓடியவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட பொழுது விசாரணையில் அவர்கள் குடவாசல் அருகே உள்ள காவனூர் பகுதியை சேர்ந்த மதுசூதனன் மற்றும் இலையூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பது தெரியவந்தது.
இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் காரைக்கால் சென்று அங்கு மது பாட்டில்களை வாங்கி வந்து குடவாசல் பகுதிகளில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் மதுபாட்டில்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து அவர்கள் மீது வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்ததாகவும் காவல்துறையினரிடம் இருந்து தப்பி ஓடியதாகவும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காவல்நிலையத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்த போதே, போலீசாருக்கு தண்ணி காட்டி அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதுதொடர்பாக முன்பு கூறிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த குடவாசல் காவல்துறையினர் இருவரையும் தேடி வருகின்றனர். இந்நிலையில் தப்பி ஓடியவர்களில் ஒருவரான மது என்கிற மதுசூதனன் பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி மாவட்ட செயலாளராக உள்ளார், என காவல்துறை சார்பில் தெரிவித்தனர். மதுபாட்டில்களை கடத்தி வந்த போது பிடிபட்ட இரண்டு நபர்களும் காவல் துறையினரிடம் இருந்து தப்பி ஓடியது குடவாசல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.